Aran Sei

திரிபுரா வன்முறை: ‘அனைத்து பிரச்சனைகளுக்கும் முதலமைச்சரே காரணம்’- ஆளும் பாஜக எம்எல்ஏகள் குற்றச்சாட்டு

திரிபுரா மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஆளும் பாஜகவின் இரண்டு சட்டபேரவை உறுப்பினர்கள், திரிபுராவில் நடந்த சமீபத்திய அரசியல் வன்முறைகள் பாஜக மற்றும் பிரதமர் மோடியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது என்றும் இது ஐந்து மாநில சட்டபேரவைத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக, செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள சட்டபேரவை உறுப்பினர்கள் சுதீப் ராய் பர்மன் மற்றும் ஆசிஷ் சாஹா ஆகியோர், “சமீபத்திய திரிபுரா மாநில அரசியல் வன்முறைகளில் உச்ச நீதிமன்றம், திரிபுரா உயர் நீதிமன்றம், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தலையிட வேண்டியிருந்தது. இவ்வன்முறைகள் கட்சியின் நற்பெயரைக் கெடுக்கும் என்பதால், இவ்விவகாரம் அனைத்தையும் கட்சியின் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் மற்றும் அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோரிடம் தெரிவித்துள்ளோம்” என்று கூறியுள்ளனர்.

“திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் ஒரு பாராட்ரூப்பர் தலைவரை போன்றவர். இந்த அனைத்து பிரச்சனைளுக்கும் அவரே பொறுப்பு. எங்கள் மந்திரம் ‘சப்கா சாத் சப்கா விகாஸ்’ (அனைவருடைய ஒத்துழைப்பு, அனைவருடைய வளர்ச்சி). ஆனால், பிப்லப் குமார் தேப் அனைவருக்கும் ஒத்துழைப்பு தரவில்லை. இந்த ஜனநாயக மாநிலத்தில் எங்கள் முக்கிய சக்தியாக சாமானிய மக்களே உள்ளனர்” என்று இருவரும் குறிப்பிட்டுள்ளனர்.

“உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஏன் இவ்வளவு வன்முறைகள் நடத்தப்படுகின்றன என்பது எங்களுக்குப் புரியவில்லையா? பாஜக தனது 44 மாத ஆட்சி காலத்தில் தேவையான வளர்ச்சியை செய்திருந்தால், தேர்தலில் வெற்றி பெற ஏன் இவ்வளவு வன்முறைகளை நடத்த வேண்டியிருக்கிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த மக்களவை தேர்தலுக்கு முன், ‘கட்சி விரோத’ நடவடிக்கையில் ஈடுபட்டதாக, மாநில அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட, திரிபுரா மாநில சுகாதாரத்துறையின் முன்னாள் அமைச்சரான சுதீப் ராய் பர்மன், “இதற்கு முன், பல முதலமைச்சர்கள் திரிபுராவில் ஆட்சி செய்துள்ளனர். ஆனால், தற்போதைய முதலமைச்சர், அவர்களுக்கு விதிவிலக்கு. எந்த அரசியல் இலக்கணத்தையும் பின்பற்றாதவர்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

“நம் முதலமைச்சர்தான் உள்துறை அமைச்சகத்திற்கு பொறுப்பு. ஆனால், சமீபத்திய தொடர் அரசியல் வன்முறைகள் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. காவல்துறையினர் அமைதி காக்கிறார்கள்” என்று சுதீப் ராய் பர்மன் மற்றும் ஆசிஷ் சாஹா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்