Aran Sei

விவசாயிகளுக்கு ஆதரவான கருத்துகள்: அழிக்க மறுக்கும் டிவிட்டர் – ‘கூ’ தளத்திற்கு மாறும் மத்திய அமைச்சர்கள்

இந்திய அரசுக்கும், டிவிட்டர் நிறுவனத்திற்கும் இடையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பான டிவிட்டர் பதிவுகளை நீக்குவது குறித்து கருத்து வேறுபாடு நிலவும் சூழலில், அமைச்சர்களும், சில அரசு துறைகளும், இந்திய நிறுவனமான ‘கூ’ என்ற சமூக வலைதளத்தில் கணக்குகளை தொடங்கியுள்ளனர்.

கடந்த வாரம் #ModiPlanningFarmerGenocide (மோடி விவசாயிகள் படுகொலைக்கு திட்டமிடுகிறார்) என்ற  ஹேஷ்டேகை பயன்படுத்திய கணக்குகளை முடக்கும்படி மத்திய அரசு டிவிட்டரிடம் கூறியது.

தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கோரிக்கைக்கு இணங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முகமது சலீம், செயற்பாட்டாளர் ஹன்ஸ்ராஜ் மீனா, ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் ஜர்னெய்ல் சிங், ஆர்த்தி, பத்திரிகையாளர் சந்தீப் செளத்ரி, எழுத்தாளர் சஞ்சுக்தா பாசு, முகமது ஆசிஃப் கான், நடிகர் சுஷாந்த் சிங் உட்பட 257 பேரின் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன.

டிவிட்டர் கணக்குகளை முடக்கும் கோரிக்கை – மத்திய அரசுடன் டிவிட்டர் நிறுவனம் பேச்சுவார்த்தை

பின்னர் பேச்சுரிமை, செய்தியின் தரம் ஆகியவற்றை சுட்டிக் காட்டி அந்த கணக்குகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தன.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், பொது ஒழுங்கை மனதில் கொண்டு பதற்றத்தையும் வெறுப்பையும் தணிக்கவும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை, டிவிட்டர் நிறுவனம் நிறைவேற்ற வேண்டும் என்று எச்சரித்தது.

“ட்விட்டர் ஒரு இடைநிலையாளர் மட்டுமே, அரசின் உத்தரவுகளை அமல்படுத்தும் பொறுப்பு அதற்கு உள்ளது. உத்தரவை அமல்படுத்த மறுப்பது தண்டனைக்கு வழி வகுக்கும்” என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ட்விட்டருக்கு அனுப்பிய ஒரு நோட்டீசில் கூறியது.

இரண்டு தினங்களுக்கு முன், மத்திய அரசு, விவசாயிகளின் போராட்டத்தின் மூலமாக பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க, வெளிநாட்டைச் சேர்ந்த சக்திகள் சதி செய்வதாக, பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளதாக கூறியது.

சர்ச்சைக்குரிய கருத்துகள் – கங்கனா ரணாவத்தின் பதிவுகளை நீக்கிய டிவிட்டர் நிறுவனம்

டிவிட்டர் தளத்தில் அவ்வாறு 1,178 கணக்குகள் செயல்படுகின்றன என்றும், அவை பெரும்பாலும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் எனவும், பாகிஸ்தானின் பின்னணியிலிருந்து செயல்படுகிறார்கள் எனவும் மத்திய அரசு குற்றம்சாட்டியது.

அரசின் இந்த கோரிக்கையை உடனடியாக ஏற்க மறுத்துள்ள டிவிட்டர் நிறுவனம், இதுகுறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது டிவிட்டர் பக்கத்தில் “இப்போது நான் கூ-வில் உள்ளேன். பிரத்யேக மற்றும் உற்சாகமூட்டும் தகவல்களை பெற, இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த குறும்பதிவிற்கான தளத்தில் என்னுடன் இணையுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு, பொருளாதார முதன்மை ஆலோசகர் சஞ்சீவ் சன்யால், “விரைவில் உங்களை அங்கே சந்திக்கிறேன்…” என்று பதில் அளித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத்துக்கு ஏற்கனவே கூ தளத்தில் அதிகாரப்பூர்வ கணக்கு உள்ளது. மறைமுக வரிக்கான மத்திய வாரியம் மற்றும் சுங்கத்துறைக்கும் கூ தளத்தில் கணக்கு உள்ளது.

கடந்த ஆண்டு, ஆத்மநிர்பார் சிறந்த செயலிகளுக்கான போட்டியில் கூ தளமும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்