Aran Sei

சூஃபி ஞானிக்கு எதிரான கருத்து : சொற்கள் தேர்வில் கவனம் வேண்டும் – உச்ச நீதிமன்றம்

Image Credits: PTI

செல்வாக்குமிக்க நபர்கள், அரசு உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் நம்பகமான தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் ஆகியோர் தங்களது சொற்களைத் தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. வெறுப்பைப் பரப்பும் பேச்சில் ஈடுபட கூடாது, அதற்கான சமூக பொறுப்பு அவர்களுக்கு உள்ளது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

வெறுப்பைப் பரப்பும் பேச்சின் தாக்கம் அதைச் சொல்லும் நபரைப் பொறுத்தது என்று நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.

128 பக்க தீர்ப்பை எழுதிய நீதிபதி சஞ்சீவ் கன்னா, “அரசு உயர் அதிகாரிகள், அதிக தொடர்புகளைக் கொண்ட தலைவர்கள், ஆட்சியில் இருப்பவர்கள், எதிர் கட்சித் தலைவர்கள், நம்பகமான தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் ஆகியோரின் சொல்லுக்குச் சாமானியனின் சொல்லை விட பாதிப்பும் நம்பகத்தன்மையும் அதிகம்” என்று கூறியுள்ளார்.

ஒரு சூஃபி ஞானியைக் குறித்து தவறான கருத்துக்களைப் பரப்பியதாகத் தொலைக்காட்சி தொகுப்பாளர் அமிஷ் தேவ்கனுக்கு எதிராகப் பல வழக்கு பதிவானது. இந்த வழக்குகளை ரத்து செய்ய நீதிபதிகள் மறுத்துவிட்டனர். நிகழ்ச்சியின் போது அவர் ஒரு தொகுப்பாளரை போல் நடந்துகொள்ளாமல் ‘இணை பங்கேற்பாளரை’ போல் நடந்துகொண்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

“செல்வாக்குமிக்க நபர்களின் பேச்சு பொதுமக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால், அவர்கள் தங்களின் அதிகாரம் மற்றும் செல்வாக்கை மனதில் கொண்டு மிகுந்த பொறுப்போடு பேச வேண்டும். அவர்களின் பேச்சும் எழுத்தும் மிக கவனமாக இருக்க வேண்டும் . அனுபவம் இருக்கும் அவர்கள் தன்மையாக உரையாற்றுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருக்கும்” என நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறியுள்ளார்.

“கோபம், உணர்ச்சிகள், தவறான உணர்வுகள் அல்லது தவறான தகவல்களால் ஆகியவற்றிற்கு ஆட்படும் சமணியனைப் போல் அவர்கள் நடந்துகொள்ள முடியாது” என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பேச்சு சுதந்திரத்திற்கும் வெறுப்பைப் பரப்புவதற்கும் வித்யாசம் உள்ளது என்றும் பேச்சு சுதந்திரம் என்பது அரசாங்க கொள்கைகளை விமர்சிப்பதற்கான உரிமை, வெறுப்பை பரப்புவது குறிப்பிட்ட சமூக குழுவைக் குறிவைக்கும் செயல் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னாதெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்