Aran Sei

தூத்துக்குடியில் முதலமைச்சர்: ‘துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு’ நீதி வேண்டும் – கனி மொழி

தூத்துக்குடி செல்லும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில், காவல்துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மக்களின் குடும்பங்களின் கோரிக்கையை நிறைவேற்றுவாரா என்று திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடியின் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி மக்கள் நோய்வாய்ப்பட காரணமாக இருப்பதாகக் கூறி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் 2018 ஆம் ஆண்டு நடைபெற்றது. 100 நாட்கள் நடைபெற்ற பெருந்திரல் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் பலியானார்கள்.

ஆலையை மூடவேண்டும் என்று தமிழகம் முழுக்க குரல்கள் எழுந்தன. தமிழக அரசும் ஸ்டெர்லைட்ஆலையை மூட உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் ஸ்டெர்லைட் ஆலைக்குச் சீல் வைத்தது.

தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆலையைத் திறக்க ஆணையிடுமாறு வழக்குத் தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழ் நாடு அரசு பிறப்பித்த தடை உத்தரவு தொடரும் என்றும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாதென்றும் தெரிவித்தது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைப் பணிகளை ஆய்வு செய்தல், நலத் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தல் ஆகிய பல்வேறு பணிகளுக்காகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன்ஒரு பகுதியாக, அவர் இன்று தூத்துக்குடி சென்றுள்ளார்.

முதலமைச்சரின் வருகையையொட்டி  தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் “தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தினர் எங்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ற அரசுப் பணி வழங்குங்கள் என்று தொடர்ந்து கோரி வருகின்றனர். அரசுதான் செவிசாய்க்க மறுக்கிறது.  இன்று தூத்துக்குடி செல்லும் முதல்வர் இது குறித்து உத்தரவிடுவாரா ” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்