Aran Sei

அர்னாப் கோசாமியின் முறைகேடு அம்பலம் – டிஆர்பி வழக்கில் சிக்கும் தமிழ் செய்தி சேனல்?

டிஆர்பி மோசடி வழக்கில், மும்பை காவதுறையினர் தாக்கல் செய்துள்ள கூடுதல் குற்றப் பத்திரிகையுடன், ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆய்வு கவுன்சிலின் (பார்க்) முன்னாள் தலைமை செயல் அதிகாரிக்கும், ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோசாமிக்கும் இடையில், வாட்ஸ் ஆப் மூலம் நடைபெற்ற உரையாடலும் இணைக்கப்பட்டுள்ளது.

சுமார் 1000 பக்கங்களுக்கு நீண்டுள்ள இந்த உரையாடல்கள், தற்போது கைது செய்யப்பட்டுள்ள, பார்க் அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பிரதோ தாஸ் குப்தாவுக்கும், அர்னாப் கோசமிக்கும் இருந்த நெருக்கத்தை வெளிப்படுத்துகிறது.

காவல்துறை சார்பாக தாக்கல் செய்யப்பட்ட இந்த உரையாடல்களின் முக்கிய பகுதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளால் டிவிட்டரில் பகிரப்பட்டு வருகிறது.

அந்தவகையில், காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் இணை ஒருங்கிணைப்பாளர் லாவண்யா பல்லால் (@LavanyaBallal), அர்னாபுக்கும், பிரதோ தாசுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலின் சில பகுதிகளை பகிர்ந்துள்ளார்.

அதில், அர்னாப் கோசாமி, டிவி18 (News 18 India) “லேண்டிங்” முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார். மேலிடத்திலிருந்து அவர்களுக்கு சரியான அடி விழுந்துள்ளது என்றும் கூறுகிறார்.

அர்னாப் முறைகேட்டில் ஈடுபட்டதற்கு ஆதாரம் உள்ளது – நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

அதற்கு பதிலளிக்கும் பிரதோ தாஸ், அவர்கள் (லேண்டிங்கை) அந்த நிறுவனத்தில் உள்ள பிற சேனல்களுக்கு மாற்றியுள்ளதாக கூறுகிறார். அதற்கு அர்னாப், செய்தி தொலைகாட்சியை முழுவதும் நிறுத்தி விட்டார்கள் என்று கூறுகிறார். அதற்கு பிரதோ தாஸ், அவர்கள் நியூஸ் 18 தமிழ் (நியூஸ் 18 தமிழ்நாடு), கலர்ஸ் போன்ற தொலைகாட்சிகளில் மாற்றியுள்ளதாக தெரிவிக்கிறார்.

Source: Twitter

 

இங்கு, அர்னாப் கோசாமி தெரிவித்துள்ள “லேண்டிங்” என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன என்பதை, கேபிள்டிவி தொழில்துறையைச் சேர்ந்த சிலரிடம் அரண்செய் கேட்டது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் பணியாற்றிய, பெயர் வெளியிட விரும்பாத முன்னாள் ஊழியர் ஒருவர் நமக்கு அதற்கான விளக்கத்தை அளித்தார்.

“நீங்கள் டிவியை ஆன்செய்ததும், எந்த சேனல் உங்களுக்கு முதலில் வருகிறதோ அதுதான் “லேண்டிங் பேஜ்” (Landing Page). லேண்டிங்கில் எந்த சேனல் வர வேண்டும் என்பதை மாற்றிக்கொள்ளலாம். லேண்டிங் பேஜில் வைக்கப்படும் சேனலுக்கு, பார்வையாளர்களால் அதிக நேரம் பார்க்கப்படும் வாய்ப்பு அதிகரிக்கும். இதனால், அந்த சேனலின் டிஆர்பி ரேட்டிங்கும் அதிகரிக்கும். ஆகவே, லேண்டிங் பேஜில் தங்கள் சேனலை சேர்க்க, கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு தொலைகாட்சி நிறுவனங்கள பணம் கொடுப்பார்கள்” என்று கூறினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்