Aran Sei

டிஆர்பி வழக்கில் வசமாக சிக்கிய அர்னாப் – பாஜக ஆதரவை பயன்படுத்தி காரியம் சாதித்தது அம்பலம்

Image Credits: Sabrang India

டிஆர்பி மோசடி வழக்கில், மும்பை காவதுறையினர் தாக்கல் செய்துள்ள கூடுதல் குற்றப் பத்திரிகையுடன், ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆய்வு கவுன்சிலின் (பார்க்) முன்னாள் தலைமை செயல் அதிகாரிக்கும், ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோசமிக்கும் இடையில், வாட்ஸ் ஆப் மூலம் நடைபெற்ற உரையாடலும் இணைக்கப்பட்டுள்ளது.

சுமார் 1000 பக்கங்களுக்கு நீண்டுள்ள இந்த உரையாடல்கள், தற்போது கைது செய்யப்பட்டுள்ள, பார்க் அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பிரதோ தாஸ் குப்தாவுக்கும், அர்னாப் கோசமிக்கும் இருந்த நெருக்கத்தை வெளிப்படுத்துகிறது.

அந்த உரையாடலில் பல இடங்களில், பிரதோ தாஸ் தனக்காக அரசிடம் பேசும்படி அர்னாப்பிடம் கேட்டுள்ளார்.

அர்னாப் முறைகேட்டில் ஈடுபட்டதற்கு ஆதாரம் உள்ளது – நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

ஒரு இடத்தில், பிரதோ தாஸ், தனக்கு பிரதமர் அலுவலகத்தின் ஊடக ஆலோசகர் பணியை பெற்றுத் தரும்படி, அர்னாப் கோசமியிடம் கேட்டுள்ளார்.

அர்னாப் கோசாமி, அரசு தரப்பில் தனக்கு நெருக்கம் இருப்பதை பிரதோ தாசிடம் அடிக்கடி தெரிவித்துள்ளார். ஒரு இடத்தில் “அனைத்து அமைச்சர்களும் நம்மோடு உள்ளனர்” என்று அர்னாப் கோசாமி அவரிடம் கூறியுள்ளார்.

தொலை தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), டிஆர்பி தரவுகளை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று முடிவெடுத்திருப்பதாகவும், அதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதோ தாஸ் கூறுகிறார். அதற்கு அர்னாப் கோசமி, தான் அதை பார்த்துக் கொள்வதாக அவரிடம் பதில் அளித்துள்ளார்.

டிஆர்பி மோசடிக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்தார் அர்னாப் – மும்பை போலீஸ்

பிரதோ தாஸ், அடிக்கடி “ஏஸ்” என்ற சங்கேத குறியீட்டை பயன்படுத்தி, அவரிடம் தகவலை  தெரிவியுங்கள் என்று அர்னாப்பிடம் கூறியுள்ளார். அர்னாப்பும் அவ்வாறே செய்துவிடுவதாக கூறுகிறார். ஆனால், அந்த 1000 பக்க உரையாடலில் எந்த இடத்திலும் “ஏஸ்” என்பது யாரைக் குறிக்கிறது என்பது தெரிவிக்கப்படவில்லை.

உரையாடலின் பல இடங்களில், ரிபப்ளிக் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி குறித்து அர்னாப் கோசாமி குறிப்பிடுகிறார். நடிகை கங்கனா ரணாவத்தின் நேர்காணலை, ரிபப்ளிக் தொலைகாட்சிதான் முதலில் ஒளிபரப்பியதாகவும், அதற்கு பிறகே மற்ற தொலைகாட்சிகள் ஒளிபரப்பியதாகவும் பிரதோ தாசிடம், அர்னாப் தெரிவிக்கிறார்.

வழக்கமா, கங்கனா ரணாவத் அதிகமான பார்வையாளர்களை ஈர்க்கக்கூடியவர் என்று கூறும் அர்னாப் கோசாமி ஆனால், அந்த நேர்காணல் எதிர்பார்த்த வகையில் பார்வையாளர்களை ஈர்க்கவில்லை என்று பிரதோ தாசிடம் கூறுகிறார்.

Source : Twitter

 

ரிபப்ளிக் தொலைகாட்சியில் அந்த நேர்காணல் வெளியான சில மணி நேரத்திற்குப் பிறகே, மற்ற தொலைகாட்சியில் கங்கணாவின் நேர்காணல் ஒளிப்பப்பட்டதை குறிப்பிடும் அர்னாப், அந்த தொலைகாட்சிகளில் அந்த நிகழ்ச்சிக்கு அதிக பார்வையாளர்கள் வந்துள்ளதை பிரதோ தாசிடம் தெரிவிக்கிறார்.

ஒரு உரையாடலின் போது, ரிபப்ளிக் தொலைகாட்சியை விட பிற தொலைகாட்சிகளின் “டிஆர்பி ரேட்டிங்” அதிகரித்துள்ளதை அர்னாப் கோசமி சுட்டிக்காட்டுகிறார். அதற்கு, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கும் பிரதோ தாஸ், “தரவுகள் அழிக்கப்படும்” என்றும் கூறுகிறார்.

இதற்கிடையில், இந்த வழக்கில், அர்னாப் கோசமியையும், ரிபப்ளிக் தொலைகாட்சியை நடத்தும் ஏஆர்ஜி அவுட்லையர் மீடியா நிறுவனத்தின் எந்த ஒரு ஊழியர் மீதும், காவல்துறை நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட தடையை, மும்பை உயர்நீதிமன்றம் ஜனவரி 29ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்