திரிபுராவில் ஜனநாயகம் இல்லை என்றும் அதனால் மக்கள் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கின்றனர் என்றும் திரிபுராவை ஆளும் பாஜகவை அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் சுதீப் ராய் பர்மன் விமர்சித்துள்ளார்.
2019 இல் சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுதீப் ராய் பார்மன், மக்களின் கருத்தைப் பெற்ற பிறகு தனது எதிர்கால திட்டம் குறித்து முடிவெடுப்பேன் என்று கூறியுள்ளார்.
திரிபுரா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
சுதீப் ராய் பர்மனும் அவரது தொண்டர்களும் இணைந்து, கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று(ஜனவரி 29), செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள அவர், “திரிபுரா மாநிலத்தில் துளியும் ஜனநாயகம் இல்லை. ஜனநாயக ஆக்ஸிஜன் தீர்ந்துவிட்டதால் மக்கள் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
சுற்றுப்பயணம் குறித்து பேசுகையில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி, பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றிய மக்களுடன் உரையாடி வருகிறோம். நாங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலைக் கேட்கும் பணியைத் தொடங்கியுள்ளோம். அவர்களின் குரல்கள் இப்போது திணறிக்கொண்டிருக்கிறது. தங்களின் நலன்களை பாஜக அரசாங்கம் நிறைவேற்றாததால், அரசாங்கத்தின்மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்” என்று சுதீப் ராய் பர்ம சுட்டிக்காட்டியுள்ளார்.
சுதீப் ராய் பர்மனின் விமர்சனங்கள் குறித்து பேசியுள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் நபேந்து பட்டாச்சார்யா, சுதீப் ராய் பார்மனின் செயற்பாடுகளை கட்சி உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், நேரம் வரும்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கூறியுள்ளார்.
முன்னதாக, 2017 இல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்தார் சுதீப் ராய் பர்மன்.
ஐந்து முறை சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றியுள்ள அவர், இதற்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவராகவும், திரிபுரா பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் இருந்திருக்கிறார்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.