Aran Sei

ஐஏஎஸ் நியமன விதிகளில் மாற்றம்: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்ப்புத் தெரிவிக்க திரிணாமூல் காங்கிரஸ் திட்டம்

ந்திய நிர்வாகப் பணி (ஐஏஎஸ்) நியமன விதிகளில் ஒன்றிய அரசு முன்மொழிந்த திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது இப்பிரச்சனையை எழுப்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான இணையவழி சந்திப்பில் கலந்துக்கொண்டு பேசியுள்ள மேற்கு வங்க முதலமைச்சரும் அக்கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, இது தொடர்பான அக்கட்சியின் எதிர்ப்பை பதிவு செய்வதற்கான செயல்திட்டங்களை அவர்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், மேற்கு வங்க அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கரை பதவி நீக்கம் செய்யக் கோருமாறு மம்தா பானர்ஜி அறிவுறுத்தியுள்ளார்.

ஐஏஎஸ் நியமன விதிகளில் மாற்றம் செய்ய ஒன்றிய அரசு திட்டம் – கூட்டாட்சிக்கு எதிரானது என தமிழக, கேரள முதல்வர்கள் பிரதமருக்கு கடிதம்

“நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பிற்கு ஒன்றிய அரசு இடையூறுகளை உருவாக்குகிறது. இப்பிரச்சனையை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்ப்போம். ஐஏஎஸ் நியமன விதிகள் திருத்தத்திற்கு எதிராக உள்ள மற்ற அரசியல் கட்சிகளுடனும் இந்த பிரச்சனை குறித்து விவாதிப்போம்” என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதீப் பந்தோபாத்யாய் கூறியுள்ளார்.

ஐஏஎஸ் (கேடர்) விதிகள், 1954 சட்டத்தில் செய்யப்படவுள்ள திருத்தம் குறித்த முன்மொழியப்பட்ட வரைவு மசோதாவானது, மாநில அரசுகளின் இடஒதுக்கீட்டு நடைமுறையை பின்பற்றாமலேயே, ஒன்றிய அரசுடைய பிரதிநிதித்துவத்தின் கீழ் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியமர்த்தும் அதிகாரத்தை ஒன்றிய அரசிற்கு வழங்குகிறது.

ஐஏஎஸ் நியமன விதிகள் திருத்தப்படுவதை எதிர்த்து ஒடிசா கடிதம்: ஒன்றிய அரசிற்கு வலுக்கும் எதிர்ப்பு

இம்முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இரண்டு முறை பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருக்கிறார். இந்த சட்டத் திருத்தம் கூட்டாட்சி அமைப்பையும் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பையும் அழித்துவிடும் என்று அவர் குற்றஞ்சாட்டி வருகிறார்.

தனது இரண்டாவது கடிதத்தில், “திருத்தப்பட்ட வரைவின் முக்கிய அம்சம் என்னவென்றால், ஒன்றிய அரசால் ஒரு அதிகாரி, ஒரு மாநிலத்திலிருந்து நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள பணியிடத்திலும் நியமிக்க முடியும். அந்த அதிகாரியின் உடன்பாடு இல்லாமலும், அவர் பணிபுரிந்து கொண்டிருக்கும் மாநில அரசிடமிருந்து ஒப்புதல் இல்லாமலும், அவருடைய பணியிலிருந்து உடனடியாக அவர் விடுவிக்கப்படலாம்” என்று மம்தா பானர்ஜி குறிப்பிட்டிருந்தார்.

“இச்செயலானது கூட்டாட்சி அல்லாத நிலையை நோக்கி இழுக்க முயல்கிறது. இச்சட்டத்திருத்தம் முந்தையதை விட மிகவும் மோசமானதாக இருப்பதாக நான் உணர்கிறேன். உண்மையில், இது நமது சிறந்த கூட்டாட்சி அரசியலின் அடித்தளத்திற்கும், இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பிற்கும் எதிரானது” என்று அக்கடிதத்தில் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஐஏஎஸ் நியமன விதிகளில் மாற்றம் செய்ய ஒன்றிய அரசு திட்டம்: கூட்டாட்சிக்கு எதிரானது என மாநிலங்கள் எதிர்ப்பு

முன்மொழியப்பட்ட சட்டத்திருத்த வரைவுக்கு மேற்கு வங்கம், தமிழ்நாடு, ராஜஸ்தான், ஜார்கண்ட், கேரளா, சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மத்தியப் பிரதேசம், பீகார் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களும் ஒன்றிய அரசின் முடிவிற்கு எதிப்பு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளன.

மகாராஷ்டிரா மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த முன்மொழியப்பட்ட வரைவு மசோதாவை கடுமையாக எதிர்க்க முடிவு செய்யப்பட்டது.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்