Aran Sei

பிரதமரின் வருகையும் மக்கள் கூட்டமும்: ‘திரிபுராவை கொரோனா உற்பத்தி நிலையமாக மாற்றுகிறார் மோடி’ – திரிணாமூல் குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி நடத்திய தனது பேரணிகளின் வழியாக ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களை ஆபத்தில் தள்ளியுள்ளார் என்றும் திரிபுராவை கொரோனா உற்பத்தி நிலையமாக மாற்றியுள்ளார் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

நேற்று(ஜனவரி 4), திரிபுரா மாநிலத்தில் உள்ள மகாராஜா பிர் பிக்ரம் விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையத்தின் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடியைக் காண ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர்.

இந்நிகழ்வு குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் திரிபுரா மாநில கமிட்டி, “இந்தியாவின் பிரதமர் ஆயிரக்கணக்கான உயிர்களை ஆபத்தில் தள்ளுகிறார். திரிபுராவை ‘கொரோனா உற்பத்தி நிலையமாக’ மாற்றியிருக்கிறார். மக்களைப் பாதுகாக்கும் திறன் கொண்டவர் என்று பிரதமர் தன்னை உண்மையிலேயே நினைக்கிறாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.

“மக்களை பொம்மைகளைப் போல எண்ணி, அவர்களின் வாழ்கையில் விளையாடியதற்காக பிரதமர் மோடியும் திரிபுரா முதலமைச்சர் பிப்லப் டெப்பும் வெட்கப்பட வேண்டும்” என்று விமர்சித்துள்ளது.

தீவிரமாக பரவக்கூடிய ஒமிக்ரான் தொற்றைக் கட்டுப்படுத்த, ஒன்றிய அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ஆனால், திரிபுராவில் நடந்த பாஜக கூட்டத்தில், அவ்வழிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்றும் அந்நிகழ்ச்சியில் பெரும்பாலான மக்கள் முககவசங்கள் கூட அணியாமல் பங்கேற்றுள்ளனர் என்றும் என்டிடிவி தெரிவித்துள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்