Aran Sei

பாஜக வரலாற்றை திருத்துகிறது; விவசாயிகளிடம் அரசு மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் – திருச்சி சிவா

நாடாளுமன்ற மாநிலங்களவையில்,குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, இந்தி திணிப்பு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி வளர்ச்சி நிதி நிறுத்தி வைத்திருப்பது, குடியுரிமை திருத்தச் சட்டம், புதிய தேசிய கல்வி கொள்கை ஆகியவை பேசியுள்ளார்.

“இந்த ஆறு ஆண்டுகளாக மக்கள் சகிக்க முடியாத துன்பங்கள் சந்தித்து வருகிறார்கள். அவற்றைப் பற்றி விவாதிக்க வேண்டும்.” என்று தொடங்கிய சிவா “முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ள டீசல் மற்றும் பெட்ரோல் விலையின் காரணமாக நடுத்தர வர்க்கம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் குறைக்கப்பட்டுள்ளது. மருந்துகளின் விலை உயர்வு, ரூபாய் மதிப்பில் சரிந்தது, பணமதிப்பிழப்பு (இது பல உயிர்களை கொன்றதுடன் சிறு குறு தொழிற்முனைவோருக்கு ஒரு பெரிய அடியை கொடுத்தது), ஜிஎஸ்டியை அவசரமாக அமல்படுத்தியது, மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டை தர  மறுப்பது.” என்று பெரிய பட்டியலை திருச்சி சிவா அடுக்கியுள்ளார்.

விவசாய சட்டங்கள் குறித்து விவாதிக்க எதிர்கட்சிகள் கோரிக்கை – அனுமதி மறுத்த சபாநாயகர் அவையை 4 முறை ஒத்திவைத்தார்

“முன்னாள் படைவீரர்களுக்கான ஓய்வூதியத்தை தாமதப்படுத்துதல், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை திரும்பப் பெற்றது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் லாபம் ஈட்டும் எல்ஐசியின் பங்குகளை விற்பது போன்றவை நாட்டில் பெரிய பிரச்சனைகளாக உள்ளது.” என்று அவர் பட்டியலை தொடர்ந்துள்ளார்.

மேலும், “விவசாய துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படுகின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதைப் கண்காணிக்க ஒரு குழுவை அரசு நியமிக்க வேண்டும். போராடி வரும் விவசாயிகளுக்கு எதிராக சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் போன்ற கடுமையான சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.” என்று திருச்சி சிவா கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு விதிகள் வகுக்கப்படுகிது – நாடாளுமன்ற குழுவிற்கு ஏப்ரல் மாதம் வரை அவகாசம்

“கடந்த ஆண்டுகளில், 35 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் பல சட்டங்கள் மாநிலங்களின் அதிகாரங்களை பறிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே பயன்படுத்தப்படுகின்றன. திட்டமிடப்படாத ஊரடங்கை அமல்படுத்தியதன் வழியாக, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை காலத்தில் நடந்ததை போல, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல மைல்கள் வெறுங்கால்களால் நடந்து சென்றனர். இதற்கிடையில், பாடப்புத்தகங்களில் வரலாற்று பாடங்கள் பாஜகவிற்கு ஏற்றார் போல திருத்தி எழுதப்படுகிறது.” என்று திருச்சி சிவா குற்றம்சாட்டியுள்ளார்.

“இந்த ஆட்சியில் ​​ஏழைகள் மேலும் ஏழைகளாகவும், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும் மாறி வருகின்றனர். விவசாய சட்ட மசோதாக்கள் கடந்த அமர்வில் நிறைவேற்றப்பட்ட விதம்… விவசாய சட்டங்களைப் பற்றி விவாதிக்க 3.5 மணி நேரத்திற்கும் குறைவாகவே வழங்கப்பட்டது. முதலில் இவை அவரச சட்டமாக அறிவிக்கப்பட்டன. ஆனால், பின்னர் அவை சட்டங்களாகக் கொண்டுவரப்பட்டன.” என்று திருச்சி சிவா கூறியுள்ளார்.

விவசாயிகள் போராட்டம் குறித்து கட்டுரை எழுதிய ’தி வயர்’ செய்தியாளர்: வழக்குப் பதிவு செய்த உத்திர பிரதேச காவல்துறை

அப்போது, சபாநாயகர் வெங்கையா நாயுடு குறுக்கிட்டு, அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன என்றும் அனைத்து தரப்பினருக்கும் விவசாய சட்டங்கள் தொடர்பாக விவாதிக்க நேரம் ஒதுக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஒரு சபாநாயராக, நான் அவற்றைப் பற்றிய தரவுகளை தொகுத்து வைத்திருக்கிறேன். வெவ்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த முப்பத்தைந்து உறுப்பினர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட நேரத்தை பேசி தீர்த்துவிட்டனர். இரண்டு கட்சிகள் பேசவே இல்லை. அவர்களை என்னால் கட்டாயப்படுத்த முடியாது. எல்லாமே சட்டப்படி நடந்தது.” என்று சபாநாயகர் கூறியுள்ளார்.

மத்திய பட்ஜெட் 2021 : ”இந்த நூற்றாண்டின் தலை சிறந்த பட்ஜெட்” – அதானி புகழாரம்

அதைத் தொடர்ந்து பேசிய திருச்சி சிவா, “அந்த மசோதாக்களை தேர்வு குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று நாங்கள் கோரினோம். விவசாய சட்டங்கள் தொடர்பான விவகாரத்தில் அரசு மனிதாபிமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்