டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக குடியரசு தினத்தன்று தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் டிராக்டர் பேரணி நடைபெறும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம் அறிவித்துள்ளார்.
தஞ்சாவூரில், நேற்று முன்தினம் (ஜனவரி 21) தொடங்கி இரண்டு நாட்களாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
’விவசாயிகளின் குடியரசு தின டிராக்டர் பேரணிக்குத் தடை விதிக்க முடியாது’ – உச்ச நீதிமன்றம் உத்தரவு
இந்நிலையில், நேற்று (ஜனவரி 22), இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது, “புதிய விவசாய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும். வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று, தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் டிராக்டர் பேரணி நடத்த முடிவெடுத்தோம். ஆனால், இதற்கு காவல் துறையினர் அனுமதி மறுப்பது கண்டனத்துக்குரியது. அன்றைய தினம் குடியரசு தின அணிவகுப்பு முடிந்த பிறகு, திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடைபெறும்.” என்று அவர் அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்றைக் காரணம் காட்டி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை இணையவழியில் நடத்தும் முறையை அரசு கைவிட்டு, ஆட்சியர் அலுவலகங்களில் நேரடியாக நடத்த வேண்டும் என்றும் ஜனவரியில் பெய்த எதிர்பாராத கனமழையின் காரணமாக 25 லட்சம் ஏக்கரில் நெல், வாழை, கரும்பு, உளுந்து, பயிறு, மணிலா, மக்காச்சோளம், சூரிய காந்தி உள்ளிட்ட பலவகையான பயிர்கள் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் மீளமுடியாத இழப்புக்கு ஆளாகியுள்ளனர் என்றும் பெ.சண்முகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
குடியரசு தின டிராக்டர் பேரணி: கலந்து கொள்ள பயிற்சி பெறும் பெண்கள்
ஆகவே, சேத மதிப்பு கணக்கெடுக்கும் பணியை அரசு போர்க்கால அடிப்படையில் முடித்து, அனைத்து பயிர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.