Aran Sei

மாநிலங்களின் சிறப்பை பறைசாற்றும் டிராக்டர் அணிவகுப்பு – அரசுக்கு நிகராக பேரணி நடத்த விவசாயிகள் திட்டம்

குடியரசு தினத்தன்று, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் சிறப்புகளையும் பறைசாற்றும் வகையில், அலங்கரிக்கப்பட்ட டிராக்டர்களின் பேரணியை நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள, மூன்று விவசாய சட்டங்களை திரும்ப பெறக் கோரி, 50 நாட்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று, டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தவுள்ளதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர். இந்த டிராக்டர் பேரணிக்குத் தடை விதிக்குமாறு, மத்திய அரசு சார்பில் டெல்லி காவல்துறை மூலம், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

டிராக்டர் பேரணி: பஞ்சாபில் தொடங்கிய பிரச்சார இயக்கம் – பெண்கள் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர்

ஜனவரி 18ஆம் தேதி, இந்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, எல்.என்.ராவ், வினீத் சரண் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, அரசு தரப்பு வழக்கறிஞரிடம், “டெல்லிக்குள் விவசாயிகளின் டிராக்டர் பேரணி நுழைவது என்பது, டெல்லி காவல்துறையின் சட்டம்- ஒழுங்கு விவகாரம். டெல்லிக்குள் யாரை அனுமதிக்க வேண்டும், யாரை அனுமதிக்கக் கூடாது என்பதை முடிவு செய்ய வேண்டியது டெல்லி காவல்துறை.” என்று கூறினார்.

’விவசாயிகளின் குடியரசு தின டிராக்டர் பேரணிக்குத் தடை விதிக்க முடியாது’ – உச்ச நீதிமன்றம் உத்தரவு

நேற்று முன்தினம் (ஜனவரி 20) இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தலைமை நீதிபதி பாப்டே அமர்வு, “டெல்லியில் விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணியை அனுமதிப்பதில் முடிவு எடுக்க வேண்டியது டெல்லி காவல்துறைதான். இது தொடர்பாக நாங்கள் ஏற்கெனவே எங்கள் பதிலை கூறிவிட்டோம். இதில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்காது. இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க முடியாது.” என்று முந்தைய உத்தரவை உறுதிப்படுத்தினர்.

டிராக்டர் பேரணி: மாற்றுப் பாதையை நிராகரித்த விவசாயிகள் – திட்டமிட்ட இடத்தில் பேரணி நடைபெறும் என்று உறுதி

மறுபுறம், குடியரசு தின பேரணி தொடர்பாக, விவசாயிகள் சங்கங்களுடன் டெல்லி காவல்துறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

இதுகுறித்து, இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்ற கிராந்திகரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தர்ஷன் பால், “டிராக்டர் பேரணி தொடர்பாக, டெல்லி காவல்துறை அதிகாரிகளை சந்தித்தபோது, டெல்லிக்கு வெளியே புறநகரில் உள்ள அதிவிரைவு சாலையில்  பேரணி நடத்துமாறு பரிந்துரைத்தனர். ஆனால் நாங்கள்  அதை ஏற்க மறுத்துவிட்டோம். இந்த வார இறுதியில் மீண்டும் அவர்களுடன் இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெறலாம்.” என்று கூறியிருந்தார்.

குடியரசு தின டிராக்டர் பேரணி: கலந்து கொள்ள பயிற்சி பெறும் பெண்கள்

இந்நிலையில், இன்று (ஜனவரி 22) செய்தியாளர்களை சந்தித்த ஸ்வராஜ் அபியான் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் யோகேந்திர யாதவ், “விவசாயிகள் சங்கங்கள், டிராக்டர் பேரணியை டெல்லிக்கு வெளியே நடத்த வேண்டும் என்று காவல்துறை விரும்புகிறது. அது சாத்தியமில்லை. ஆனால், நாங்கள் எங்கள் பேரணியை டெல்லிக்குள்ளேயே அமைதியாக செய்வோம்.” என்று கூறியுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

”எல்லா திட்டங்களும் சரியாக நடந்தால், குடியரசு தினத்தன்று திட்டமிடப்பட்டுள்ள டிராக்டர் பேரணியில், பல்வேறு மாநில சிறப்புகளையும் பறைசாற்றும் வகையில், டிராக்டர்களின் பேரணி நடக்கும்.” என்று ஹரியானாவைச் சேர்ந்த, பாரதிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சவுத்ரி ஜோகிந்தர் காசி ராம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இடம் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்