Aran Sei

டூல்-கிட் வழக்கு : சுற்றுச்சூழல் ஆர்வலர் சுபம் கார் சௌதுரிக்கு மும்பை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன்

விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பர்க் பகிர்ந்து கொண்ட ‘டூல்-கிட்’ தொடர்பாக டெல்லி காவல்துறை பதிவு செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் சுபம் கார் சௌதுரிக்கு மும்பை உயர்நீதிமன்றத்தின் கோவா கிளை முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

நேற்று முன்தினம் (மார்ச் 3), நீதிபதி எம்.எஸ்.ஜவல்கர், டெல்லியில் உள்ள தகுதிவாய்ந்த நீதிமன்றத்தை அணுகி, அவருக்கு தேவையான நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி, மார்ச் 12 ஆம் தேதி வரை அவருக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

கைது செய்யப்படலாம் என்று அச்சப்படுவதற்கான காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளவைகளும் சூழ்நிலைகளும் ஏற்றுக்கொள்ளும்படியாகவே உள்ளன என்று இவ்வழக்கு தொடர்பாக நேற்று (மார்ச் 4) கிடைக்கப்பெற்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூழலியல் செயல்பாட்டாளர் தீஷா ரவிக்கு ஜாமீன் – டெல்லி நீதிமன்றம் உத்தரவு

சுபம் கார் சவுத்ரி, தனது மனுவில்,  “கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் நான் கோவாவில் வசித்து வருகிறேன். டூல்கிட் வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் ஒரு தீவிரமான சுற்றுச்சூழல் ஆர்வலர். சுற்றுச்சூழல் ரீதியிலான பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தேடுவதிலும், கொள்கை வகுப்பதிலும், சுற்றுச்சூழல் சார்ந்த அணுகுமுறையை முன்வைப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன்.” என்று தெரிவித்திருந்தார்.

கடந்த மாதம், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்ற இருவரான வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் சாந்தனு முலுக் ஆகியோருக்கு மும்பை உயர் நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியிருந்தது. பின்னர், டெல்லியில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை இருவரும் அணுகினர்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபரான திஷா ரவி, பிப்ரவரி 13-ம் தேதி பெங்களூரூவில் வைத்து டெல்லி காவல்துறையின் சைபர் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவருக்கு, டெல்லி நீதிமன்றம் பிப்ரவரி 23-ம் தேதி ஜாமீன் வழங்கியது.

டூல்கிட் வழக்கு: தனது வழக்கில் தானே வாதாட நிகிதா ஜேக்கப் கோரிக்கை – டெல்லி நீதிமன்றம் அனுமதி

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, ஸ்வீடனைச் சேர்ந்த சூழலியல் செயல்பாட்டாளர் கிரெட்டா துன்பர்க், தனது டிவிட்டரில் பக்கத்தில், விவசாயிகள் போராட்டம் குறித்த ஆவணத்தை (டூல்கிட்) பதிவிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து, டெல்லி காவல்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்தது.

கிரெட்டா பதிவிட்ட அந்த டூல்கிட் ஆவணத்தை, தீஷா ரவி பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். நிகிதா ஜேக்கப், சாந்தனு முல்க் ஆகியோர் மீதும் இதே குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்