Aran Sei

விவசாயிகளின் உயிர்கள் முக்கியம்; போராட்டத்தைக் கைவிடுங்கள் – கோரிக்கை விடுத்த மத்திய அமைச்சர்

Image Credit : indianexpress.com

கொரோனா சூழலில், விவசாயிகள் போராட்டத்தை கைவிடுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர்களின் உயிர் எங்களுக்கு முக்கியம் என்றும் விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர குமார் தோமர் தெரிவித்துள்ளார்.

டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கும் மத்திய அரசிற்கும் இதுவரை நடைபெற்றுள்ள 11 கட்ட பேச்சுவார்த்தைகளிலும் உரிய தீர்வு எட்டப்படாமல் தோல்வியடைந்துள்ளன. மத்திய அரசு சார்பில் விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர குமார் தோமர் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவும், விவசாயிகள் சார்பில் விவசாயிகள் சங்க தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.

கடைசியாக, கடந்த ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற்ற 11 வது சுற்றுப்பேச்சுவார்த்தையில், விவசாய சட்டங்களை 18 மாதங்கள் நிறுத்தி வைக்கும் முன்மொழிவை மத்திய அரசு வைத்தது. அம்முடிவில், இருதரப்பிற்கும் இடையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை.

பேச்சுவார்த்தைக்கான கதவுகளைத் திறக்க கோரும் விவசாயிகள் – ஏற்கமறுக்கும் மத்திய அரசு

அதைத்தொடர்ந்து, ஜனவரி 26 ஆம் தேதி, விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறைக்குப் பிறகு, பேச்சுவார்த்தை தொடர்வதற்கான அறிகுறிகள் இல்லாது போனது.

இதனிடையில், இந்தச் சட்டங்களை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தது. அதேநேரம், மத்திய அரசும் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த 18 மாதங்கள் நிறுத்தி வைத்திருக்கிறது.

கடந்த பிப்பிரவரி மாதம், விவசாயிகளுடனான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க மத்திய அரசு தயாராக இருப்பதாக கூறிய மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், “அதேநேரம், முதலில் அவர்கள் மூன்று விவசாய சட்டங்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கும் மத்திய அரசின் முன்மொழிவை ஏற்க வேண்டும்.” என்று தெரிவித்திருந்தார்.

விவசாயிகள்: “நிறைவேற்றப்பட்ட சட்டத்தை நிறுத்திவைக்க அரசுக்கு அதிகாரம் இல்லை” – தோல்வியில் முடிந்த 11ஆம் கட்ட பேச்சுவார்த்தை

மறுபுறம், மூன்று விவசாய சட்டங்களை நீக்குவது மட்டுமே ஒரே தீர்வேயன்றி, ஒத்திவைப்பதல்ல என்று போராடும் விவசாயிகள் சங்கங்கள் உறுதியாக, அந்த முன்மொழிவை ஏற்க மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 10), செய்தியாளர்களிடம் பேசிய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர குமார் தோமர், “இப்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால், ஒட்டுமொத்த நாடும் உலகமும் தொற்று தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி வருகின்றன. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூட இந்த நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அவர்களின் வாழ்க்கை எங்களுக்கு முக்கியமானது.” என்று கூறியுள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அச்செய்தியில், தற்போதைய கொரோனா சூழலில், விவசாயிகள் போராட்டத்தைக் கைவிடுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர்கள் ஒரு முன்மொழிவோடு வந்தால், நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

‘கொரோனா பாதுகாப்பில் பாஜகவின் போலித்தனங்கள் வெளிச்சத்திற்கு வந்துவிட்டன’ – விவசாயிகள் சங்க தலைவர் கருத்து

ஏப்ரல் 9 ஆம் தேதி, போராட்டக்களத்தில் செய்யப்பட்டுள்ள தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய போராடும் விவசாயிகள் சங்கங்களில் ஒன்றான ஸ்வராஜ் இந்தியாவின் தலைவர் யோகேந்திர யாதவ், “இங்கு ஒவ்வொறு இடத்திலும் க்ளீனிக்குகள் உள்ளன. ஒவ்வொரு போராட்டக்களத்திலும் தகுதி வாய்ந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலருக்கு மருத்துவமனைகள் உள்ளன. காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்றவை அதிகரித்திருந்தால் உடனடியாக அவர்கள் அந்த மருத்துவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படுவர்.”  என்று தெரிவித்திருந்தார்.

மேலும், “கொரோனா தொற்று பரவலால், விவசாய போராட்டத்தைக் கலைக்க வேண்டும் என்று அவர்கள் (மத்திய அரசு) கூறுவார்களேயானால், முதலில் மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தைத் தடை செய்திருக்க வேண்டும். அதைவிட அவர்கள் செய்ய வேண்டிய முதல் வேலை, பாஜகவின் பேரணிகளை தடை செய்வது. அப்பேரணிகளில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருங்கூட்டங்களுக்கிடையில் உரையாற்றுகிறார். இதன் வழியாகவே இவர்களின் போலித்தனங்கள் வெளிச்சத்திற்கு வந்துவிட்டன.” என்று பாஜக தலைமையிலான மத்திய அரசை ஸ்வராஜ் இந்தியாவின் தலைவர் யோகேந்திர யாதவ் விமர்சித்திருந்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்