Aran Sei

மறைவெய்திய தா.பா : ‘60 ஆண்டுகளைக் கடந்து ஒளி வீசிய சிவப்பு நட்சத்திரம் உதிர்ந்தது’ – தலைவர்கள் இரங்கல்

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார். அவரது மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், “அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் போர்க்குரலாக ஒலித்தவர். இந்திய ஜனநாயகத்தின் ஏற்றமிகு தீபங்களில் ஒன்றாக ஒளிவீசியவர். நினைத்த கருத்தை எவ்வித தயக்கமும் இன்றி எத்தகைய தலைவர்களிடமும் எடுத்து வைக்கும் அற்புதமான ஆற்றல் படைத்த அவர், மேடைகளிலோ, விவாதங்களிலோ பேசத் தொடங்கி விட்டால் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அந்த அளவுக்கு அறிவுபூர்வமாக, ஆக்கபூர்வமான கருத்துக்களை இலக்கிய நயத்துடன் மக்கள் மன்றத்தில் எடுத்து வைப்பதில் வல்லவர்.” என்று தமிழ் சமூகத்தின் மூத்த தலைவரை பற்றிய தன் நினைவுகளை திறக்கிறார்.

சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் ‘தமிழ் மண்ணை நாங்கள் அடிமையாக விட மாட்டோம்’ என்று சிம்மக் குரல் எழுப்பியதை நான் நேரில் கேட்டேன் என்றும் அன்னைத் தமிழ் மீதும், தமிழ் நாட்டின் மீதும், இந்தியாவின் பன்முகத்தன்மை மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட தா.பாண்டியன் இப்போது நம்மிடம் இல்லை என்பதை என் நெஞ்சம் ஏற்க மறுக்கிறது என்றும் அவருடனான அண்மை தருணத்தை நினைவூட்டி கடக்க முயன்று தோற்கிறார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தனது இரங்கள் குறிப்பில், தமிழக அரசியலில் அறுபது ஆண்டுகளைக் கடந்து ஒளி வீசிய சிவப்பு நட்சத்திரம் உதிர்ந்துவிட்டது என்று இரத்தின சுருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

`கர்ணம் அடித்தாலும் பாஜக கால் ஊன்ற முடியாது’ – தா.பாண்டியன்

“இந்திய அரசியலை பாசிச சக்திகள் சூழ்ந்து, சாதி, மதப் பிளவுகளை விரிவுபடுத்தி, மக்களைப் பிரித்து, இந்திய தற்சார்புப் பொருளாதாரத்தைச் சீரழித்து, தனியார் பெருமுதலாளிகளிடம் நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைத்து வரும் இன்றைய சூழலில், பழுத்த அனுபவமிக்க அரசியல் கூர்மை பெற்ற மூத்த தலைவரான தோழர் தா.பாண்டியனின் மறைவு முற்போக்கு, ஜனநாயக சக்திகளுக்குப் பேரிழப்பாகும்.” என்று தா.பாண்டியனின் இழப்பை சமகால முற்போக்கு, ஜனநாயக சக்திகளின் இழப்பாக சுட்டிக்காட்டியுள்ளார் முத்தரசன்.

இலங்கையில் சிங்களப் பேரினவாதத்தின் குரூரமான தாக்குதலுக்கு ஆளானபோது பயனுள்ள எதிர்வினை ஆற்றியவர் என்றும் தமிழகத்தில் பல்வேறு சக்திகளை ஒன்றிணைத்து காலத்தில் அவர் எடுத்த முயற்சியால், சிங்கள எதிர்ப்பு தமிழர் பாதுகாப்புச் செயல்பாடு மீண்டும் சூடு பிடித்தது என்றும் அவரின் முக்கிய பங்கை நினைவூட்டியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், “தோழர் தா.பா அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவு ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்திற்கும் நேர்ந்த பேரிழப்பாகும். ஈழத் தமிழர்களின் நலன்களில் அக்கறையோடு பணியாற்றியவர். முற்போக்கு சிந்தாந்த தளத்தில் அவரது பங்களிப்பு மகத்தானது. அவருக்கு எமது வீரவணக்கம்.” என்று தனது அஞ்சலையை செலுத்தியுள்ளார்.

இன்குலாபின் அறமும் அரசியலும் – நான்காம் ஆண்டு நினைவஞ்சலி

மதிமுக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, தனது இரங்கலில், “தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில், தன்னிகரற்ற சொற்பொழிவாளர்; ஆற்றொழுக்குப் போல, தங்கு தடையின்றி, தமது கருத்துகளை எடுத்துரைப்பவர், மிகச்சிறந்த எழுத்தாளர், இலக்கியவாதி. எண்ணற்ற கட்டுரைகள், நூல்களை எழுதி இருக்கின்றார். தோழர் ஜீவாவின் பேரன்பைப் பெற்றவர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவராகச் சிறப்பாகப் பணியாற்றினார். பொதுவுடைமைக் கட்சி நடத்திய அத்தனை போராட்டக் களங்களிலும் பங்கேற்றவர்.” என்று தா.பாண்டியனின் அறுபதாண்டு கால அரசியல் கள வாழ்க்கையின் முத்துகளை வரிசையாக கோர்த்து, தன் அஞ்சலியை அவருக்கு அணிவித்துள்ளார்.

“கடைசியாக, கடந்த பிப்ரவரி 18ஆம் நாள், மதுரையில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் எழுச்சி மாநாட்டில் அவர் பேசும்போது, மேடையில் இருந்து கேட்டேன். என் கையும் காலும்தான் சரியாக இல்லை, ஆனால், என் மண்டை சரியாகத்தான் இருக்கின்றது, பொதுவுடைமைக் கொள்கை வென்றே தீரும், அதற்காக என் மூச்சு இருக்கின்றவரையிலும் முழங்குவேன் என்று அவர் சொன்னபோது, மெய்சிலிர்த்துப் போனேன். அவரது உரை, என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.” என்று அண்மையில் அவரை சந்தித்தி நிகழ்வு மறக்கவியலா நினைவாக மாறிப்போனதை வைகோ குறிப்பிட்டுள்ளார்.

சிங்காரவேலர்: தொழிலாளர் வர்க்க மாவீரன் – பேரறிஞர் அண்ணா

பாமக நிறுவன தலைவர் ராமதாஸ், “இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களுடனும், நல்லக்கண்ணு உள்ளிட்ட தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களுடனும் இணைந்து அரசியல் பணியாற்றியவர். கடந்த பல ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட, அதைப் பொருட்படுத்தாமல் இயக்கப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். அவரது மறைவு தமிழகத்தில் பொதுவுடமை இயக்கத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும்.” என்று தனது இரங்கல் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், “ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருந்து சமரசமின்றி சமூக நீதிக்காகவும், சமூகத்திற்காகவும் போராடிய மாபெரும் போராளி தா.பாண்டியன். சிறந்த சிந்தனையாளர், சிறந்த பேச்சாளர், சிறந்த எழுத்தாளர், சிறந்த நாடாளுமன்றவாதி, எளிய மனிதர் எனப் பன்முகத்தோடு திகழ்ந்த தா.பாண்டியன் அவர்கள் சாமானியர்களின் எளிய தலைவராக விளங்கினார். அதுமட்டுமின்றி எனக்கு ஒரு நல்ல அரசியல் வழிகாட்டியாகவும் விளங்கினார் தா.பா.” என்று தனது வழிக்காட்டியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது மறைவு தமிழ்ச் சமூகத்திற்கும், அரசியலுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. தா.பாண்டியனின் ஆழமான கருத்துகள், அறிவுசார்ந்த பேச்சுகள் இனிமேல் கேட்காது என்பதை நினைக்கும்போது என் மனது வலிக்கிறது என்று வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார்..

தமிழக பாஜகவின் தமிழக தலைவர் எல்.முருகன், “65 ஆண்டுகாலப் பொது வாழ்க்கையில் உழைத்திட்ட தலைவர் தா.பாண்டியன் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். பத்திரிகை ஆசிரியர், எழுத்தாளர், மேடைப் பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், இலக்கிய மன்றங்களை அலங்கரித்தவர் எனப் பலதுறை வித்தகராக விளங்கியவர்.” என்று இச்சமூகத்தில் அவர் வகித்த பாத்திரங்களை தன் இரங்கலில் பட்டியலிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்