Aran Sei

‘அதிமுக ஆட்சியில் மதுபானக்கடைகளுக்கு எதிராக போராடிய ஸ்டாலின் தற்போது கடைகளை திறந்தது ஏன்’ – சீமான் கேள்வி

credits : The deccan herald

மளிகைக் கடைகளுக்கும் இவ்வளவு கட்டுப்பாட்டை விதித்திருக்கிற தமிழக அரசு, மதுபானக்கடையை ஏன் இன்னும் திறந்து வைத்திருக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் ஏற்கனவே  விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தொடர்ந்து, தற்போது  மேலும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக, தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, வரும் மே 6-ம் தேதி காலை 4 மணி முதல் மே 20-ம் தேதி காலை 4 மணி வரை இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், அரசு மற்றும் தனியார் அலுவகங்கள் அதிகபட்சமாக 50% பணியாளர்களுடன் இயங்கவும், பயணிகள் ரயில், மெட்ரோ ரயில், பேருந்துகள், டாக்ஸியில் 50% இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து செல்லவும் மட்டுமே அனுமதியளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் செயல்பட அனுமதி; தமிழகம் போர்க்களமாக மாறும் – சீமான் எச்சரிக்கை

மேலும், அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படுவதாகவும், தேநீர் கடைகள் நண்பகல் 12 வரை மட்டுமே இயங்க அனுமதியளிக்கப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

எழுவர் விடுதலையில் ஆளுநரின் கள்ள மௌனம் கண்டனத்திற்குரியது – சீமான் குற்றச்சாட்டு

இந்நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”காய்கறிக்கடைகள், மளிகைக்கடைகள், தேநீர் கடைகள் போன்ற அத்தியாவசியக்கடைகள் மதியம் 12 மணிக்கே மூடப்பட வேண்டுமென தமிழக அரசு அறிவித்திருப்பது மிகத்தவறான நிர்வாக முடிவாகும். கொரோனா வீரியம் பெற்றுப் பரவிக்கொண்டிருக்கும் தற்காலத்தில் கட்டுப்பாடும், விதிகளும் அவசியமென்றாலும்கூட அதற்காகத் தொலைநோக்குப் பார்வையின்றிக் கண்மூடித்தனமாக விதிகளைக் கொண்டு வந்து மக்களை முடக்குவது ஏற்கத்தக்கதல்ல.” என்று தெரிவித்துள்ளார்.

“நிரந்தரமான வருமானமோ, மாதாந்திர ஊதியமோ இன்றி அமைப்புசாராத் தொழிலாளர்களாகப் பணியாற்றும் அடித்தட்டு உழைக்கும் மக்களும், அன்றாடங்காய்ச்சிகளும் அன்றைக்கு உழைத்து கிடைக்கிற சிறுதொகையைக் கொண்டுதான் அன்று அன்றைக்குச் சமைத்துண்ணுகிறார்கள். அத்தகைய மக்கள் உழைத்து ஊதியம்பெற்று வீடு திரும்பவே மாலை 6 மணிக்கு மேலாகும் எனும்போது, பகல் 12 மணிக்கே கடைகளை மூடுவது அவர்களை வெகுவாகப் பாதிக்கும். இத்தகைய பரந்துபட்டப் பார்வையின்றிப் பொத்தாம் பொதுவாக முடிவெடுத்து மேம்போக்காக அணுகுவது மக்கள் நலனுக்கு முற்றிலும் எதிரானதாகும்.” என்று அவர் கூறியுள்ளார்.

வள்ளுவருக்கு காவிச்சாயம் பூசும் தமிழக அரசு : தமிழ்நாடு தழுவிய கிளர்ச்சி வெடிக்கும் – கி. வீரமணி எச்சரிக்கை

மேலும், “அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு போய்ச் சேர்க்கிற காய்கறிக் கடைகளுக்கும், மளிகைக் கடைகளுக்கும் இவ்வளவு கட்டுப்பாட்டை விதித்திருக்கிற தமிழக அரசு, மதுபானக்கடையை ஏன் இன்னும் திறந்து வைத்திருக்கிறது? என்பதற்குப் பதிலில்லை. மனித உயிர்க்குடிக்கும் மதுபானக்கடைகளை இப்பேரிடர் காலத்தில் முழுநேரமும் மூடுவதில் அரசுக்கு என்ன தயக்கம்? என்பது புரியவில்லை.” என்று சீமான் தெரிவித்துள்ளார்.

பொதிகைத் தொலைக்காட்சியில் சமஸ்கிருதச் செய்திக் குறிப்பு : திராவிடர் கழகம்போராட்டம்

”ஊரடங்குக்காலக்கட்டத்தில் ஊதியமும், வருமானமும் பெரியளவு இல்லாத இத்தருணத்தில் மதுபானக்கடைகளைத் திறந்து வைத்திருப்பது உழைக்கும் மக்களின் சிறுஊதியத்தையும் உறிஞ்சத்தானே வழிவகுக்கும்? கடந்தாண்டு கொரோனா ஊரடங்குக்காலத்தில் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து அவற்றை மூடக்கோரி வீட்டுவாசலில் கறுப்புக்கொடியேந்திப் போராடிய ஐயா ஸ்டாலின், இன்றைக்குத் தனது அரசு பதவியேற்கையில் கொரோனா தொற்று முன்பைவிட வீரியமாகப் பரவி உயிர்களைக் குடித்துக்கொண்டிருக்கும்போது மதுபானக்கடைகளை மூடுவதற்குத் தயங்குவது ஏன்?” என்று நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்