Aran Sei

’தமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்தி அடிக்கிறார்கள்; திராணி இல்லாத மத்திய அரசு’ – கொதிக்கும் மீன சங்கத்தினர்

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்திலிருந்து, ஜனவரி 18 ஆம் தேதி காலை, 214 விசைப்படகுகளில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச்சென்றனர். இவர்களில் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த ஆரோக்கியசேசு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், அதே பகுதியைச் சேர்ந்த மெசியா, உச்சிபுளியைச் சேர்ந்த நாகராஜ், செந்தில்குமார் மண்டபத்தைச் சேர்ந்த சாம் ஆகிய நான்கு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.

“இலங்கை கடற்படை இனி கைது செய்யப்போவதில்லை, மூழ்கடித்து கொலை செய்யப்போகிறது” – வைகோ காட்டம்

கோட்டைபட்டினத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களில், 213 விசைப்படகுகள் கரை திரும்பின. ஆனால் ஆரோக்கியசேசுவிற்கு சொந்தமான விசைப்படகில் சென்ற நான்கு பேரும் கரை திரும்பவில்லை .

இதுகுறித்து சக மீனவர்கள் மேற்கொண்ட விசாரணையில், ஆரோக்கிய சேசுவின் விசைப்படகை இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியதில் படகு கடலுக்குள் மூழ்கி 4 பேரும் இறந்துவிட்டதாக தெரிய வந்ததுள்ளது. இதனிடையே, காணாமல் போன நான்கு மீனவர்களின் சடலங்களாக கிடைத்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

’மீனவர்களை கொல்லும் ராஜபக்சே சகோதரர்கள்; தட்டிக்கேட்காமல் வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு’ – ஸ்டாலின் கண்டனம்

இதுகுறித்து, இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் எஸ்.எமரெட்டிடம் அரண்செய் பேசியபோது, “கடந்த திங்கள்கிழமை இரவு ஒன்பது மணிக்கு சம்பவம் நடந்தது. செவ்வாய்கிழமை தகவல் கிடைத்தவுடன், மண்டபத்தில் இருந்து இரண்டு கடற்படை கப்பலும், காரைக்காலில் இருந்து இரண்டு கடற்படை கப்பலும், இலங்கை கடற்படையும் தேடியிருக்கிறார்கள். யாரும் கிடைக்கவில்லை. அன்றைக்கே கோட்டைபட்டினத்தில் இருந்து மூன்று விசைப்படகுகளும் தேடி சென்றிருக்கிறார்கள். அவர்களை தேட விடவில்லை. மீண்டும் தேட முயற்சித்தபோது, நாங்கள் மீனவர்கள் கிடைத்தால், உங்கள் கடற்படையிடம் ஒப்படைக்கிறோம் என்று இலங்கை கடற்படை கூறியிருக்கிறது. அதை தொடர்ந்து, நேற்று முன் தினம் (ஜனவரி 20) இரண்டு மீனவர்களின் சடலத்தையும், நேற்று (ஜனவரி 21) இரண்டு மீனவர்களின் சடலத்தை மீட்டதாக சொல்லியிருக்கிறார்கள்.” என்று கூறினார்.

’அத்துமீறும் சிங்களக் கடற்படை; வேடிக்கை பார்க்கும் இந்திய கடலோரக் காவல்படை’ – ராமதாஸ் கவலை

மேலும், “உடற்கூறாய்வு இலங்கையில் நடந்தால், நடந்த உண்மை வெளிவராது. சடலங்களை இந்தியாவிற்கு எடுத்து வந்து உடற்கூறாய்வு நடத்தப்பட வேண்டும். நாலு மீனவர்களை கொலை செய்த இலங்கை கடற்படை மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு முன் இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த எமரெட், “இத்தாலி கப்பல் மோதி, இரண்டு கேரள மீனவர்கள் இறந்ததற்கு, அந்த இத்தாலியர்கள் மீது கேரள அரசு கொலை வழக்கு பதிந்து, கைது செய்தது. திராணியுள்ள இந்திய அரசாக இருந்தால், இலங்கை அரசாங்கத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், கடுமையான போராட்டங்களை முன்னெடுக்கப்போகிறோம். நாளை மத்திய அமைச்சர் இராமேஸ்வரம் வருகிறார். அவர் நுழைய முடியாது.” என்று எச்சரித்துள்ளார்.

`மத்திய அரசு துரோகத்தை நிறுத்த வேண்டும்’ – தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கம்

கடந்த மாதம் இருநாட்டு அதிகாரிகளும் ஏற்பாடு செய்திருந்த பேச்சுவார்த்தை குறித்து கூறும்போது, “பேச்சுவார்த்தை ஒரு சம்பரதாயமாக நடந்தது. ஏசி ரூமில் உட்காந்திருக்கும் அதிகாரிகளுக்கு மீனவர்களின் பிரச்சனை தெரியுமா? இதை ஒரு பேச்சு வார்த்தை என்று சொல்லி, இருநாட்டு அரசாங்கமும் நாடகமாடிக்கொண்டிருக்கிறது. இருநாட்டு மீனவர்களும் பேசினால் தான், எங்களுக்குள் இருக்கும் பிரச்சனையை பகிர்ந்துக்கொள்ள முடியும்.” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை கடற்படையின் படகு மோதி தமிழக மீனவர்கள் பலி – உடலை ஒப்படைக்கக்கோரி மறியல்

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைக்கு அரசு விவகாரமாக சென்று வந்தாரே என்று நினைவுப்படுத்துகையில், “அதற்கு பின் தான் இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது. சமீபத்தில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று அந்த நாட்டு நீதிபதியே சொல்கிறார். மறுநாள் இந்த நாலு பேர் இறந்துள்ளனர். இலங்கையை நட்பு நாடு என்று சொல்வதை முதலில் நிறுத்த வேண்டும்.” என்று எமரெட் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

சமீபத்தில் தூத்துக்குடி மற்றும் இராமேஸ்வரத்தை சேர்ந்த 21 மீனவர்கள், இலங்கை அரசால் கைது செய்யப்பட்டதை பற்றி குறிப்பிடுகையில், “அதில் சிலரை விடுவித்துள்ளார்கள். ஆனால் கடும் சித்திரவதைக்கு பின் விடுவித்துள்ளார்கள். கிருபை என்பவருக்கு சொந்தமான படகும், அதோடு சென்ற 9 மீனவர்களும் விடுவிக்கப்படவில்லை.” என்று அவர் கூறினார்.

‘பிடுங்கப்பட்ட தீவுகளை மீனவப் பழங்குடிகளிடம் திருப்பிக் கொடுங்கள்’ – ஜோ டி குரூஸ்

என்ன சித்திரவதைகள் செய்யப்படுகிறார்கள் என்ற கேள்விக்கு, “நிர்வாணப்படுத்தி அடித்திருக்கிறார்கள். கிருபைக்கு ஒரு கண்ணே வெளியே தொங்குவது போல இருக்கிறதாம். ஜனவரி 13 ஆம் தேதியே விடுதலை செய்ய உத்தரவிட்டிருக்கிறார்கள். அதற்கு பின்பும் அவர்களை சிறையில் வைத்து சித்தரவதை செய்திருக்கிறார்கள். வந்தவர்கள் கதறி அழுகிறார்கள். ப்ளேடால் கைகளில் வெட்டியிருக்கிறார். “உங்க தூதரகத்தில் இருந்து ஆள் வந்து கேட்டால், அடிக்கவில்லை என்று சொல்லனும்” என்று சொல்லி சொல்லி அடித்திருக்கிறார்கள். கக்கூஸிற்கு கூட போக விடாமல் அடித்திருக்கிறார்கள். கொலை குற்றவாளிக்கு என்ன ஒரு தீவிரவாதிக்கு கூட இப்படி கொடுமை நடக்காது. எல்லாவற்றையும் மோடி அரசாங்கம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. மோடி அரசு இலங்கை அரசின் கைக்கூலியாக இருக்கிறது. இலங்கையில் முதலீடு செய்துள்ள அம்பானிக்கும் அதானிக்கும் சாதகமாக இருந்துகொண்டு, தமிழக மீனவர்களை அழிக்கிறது.” என்று எமரெட் உணர்வு பொங்க கூறினார்.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் – இலங்கை கடற்படை அட்டூழியம்

மேலும், “விடுதலை செய்யப்பட்டவுடன் இந்திய தூதரகம் தான் அவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும். விமானம் ஏற்றிவிடும் வரை தூதரக அதிகாரிகளின் பொறுப்பு. ஆனால் அப்படி அவர்கள் எப்போதும் செய்வதில்லை.” என்றும் அவர் கூறினார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்