Aran Sei

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் : ‘ஏப்ரல் 6 வாக்குபதிவு, மே 2 வாக்கு எண்ணிக்கை – அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்’

மிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்றும் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்க மாநிலங்களிலும் சட்டப் பேரவை காலம் முடிவடையும் நிலையில், இன்று தேர்தல் தேதி அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, “வேட்புமனுத் தாக்கலின்போது இருவர் மட்டுமே உடன் இருக்கலாம். வேட்புமனுவை இதுவரை நேரில் மட்டுமே தாக்கல் செய்து வந்த நிலையில், இம்முறை ஆன்லைனிலும் தாக்கல் செய்யலாம். தமிழகத்தின் சிறப்பு தேர்தல் பார்வையாளராக தேவேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு தொகுதிக்கு ரூ.30.8 லட்சம் மட்டும் தேர்தல் செலவு செய்ய அனுமதிக்கப்படுகிறது. தமிழத்தில் மொத்தம் 88,936 வாக்கு செலுத்தும் மையங்கள் அமைக்கப்படவுள்ளன. கடந்த தேர்தலை விட இது 34.73 சதவிகிதம் அதிகம்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“80 வயதுடையவர்களுக்கு தபால் வாக்கு கட்டாயம் அல்ல, விருப்பப்பட்டால் மட்டும் வாக்களிக்கலாம். ஒரு மணிநேரம் வாக்குப்பதிவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். வேட்புமனுத்தாக்கலுக்கு வேட்பாளரோடு இருவருக்கு மட்டும் அனுமதி. மேலும், 2 வாகனங்களில் மட்டும் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.” என்று தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறியுள்ளார்.

மேலும், “ஒரு வேட்பாளருடன் 5 நபர்கள் மட்டுமே வாக்கு சேகரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் 5 பேருக்கு மேல் ஒன்றாக சேர்ந்து சென்று வீடுகளில் வாக்கு சேகரிக்ககூடாது. அசாமுக்கு 3 கட்டங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். அசாமில், மார்ச் 2 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“5 மாநிலங்களுக்கும் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும். கேரளாவில் 14 மாவட்டங்களிலும் ஒரே கட்டமா ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடக்கும். தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.” என்று தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் மார்ச் 12 ஆம் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்கி, மார்ச் 19 ஆம் தேதியுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு பரிசீலனை மார்ச் 20 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், வேட்புமனுவை திரும்பப் பெற மார்ச் 22 ஆம் தேதி கடைசிநாள் என்று அறிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்