Aran Sei

’சமஸ்கிருதத்திற்கு ரூ.643.83 கோடி, தமிழுக்கு ரூ.22.94 கோடியா?’ – மத்திய அரசிற்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

மஸ்கிருத மொழியைப் பரப்புவதற்காகக் கடந்த மூன்றாண்டுகளில் ரூ.643.83 கோடியைச் செலவழித்துள்ளது மத்திய அரசு என்று கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, இன்று (ஜனவரி 16) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ”புதிய கல்விக் கொள்கை மூலமாக மும்மொழி திட்டத்தைத் திணிக்க மத்திய அரசு முயன்றபோது, தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக அந்த முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ரயில்வே, அஞ்சல் துறைப் பணியாளர் தேர்வுகளில் இந்தி, ஆங்கிலம் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து கடுமையான எதிர்ப்பு வந்தபோது மீண்டும் பாஜக அரசு பின்வாங்கியது. ஆனால், பாஜக அரசின் ஒரே நோக்கம் இந்தி மொழியைத் திணிப்பது மட்டுமல்ல, புழக்கத்திலே இல்லாத சமஸ்கிருத மொழியைத் திணிப்பதற்குக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சமஸ்கிருத திணிப்பிற்கு மாணவர்கள் எதிர்ப்பு – கைது செய்த பாஜக அரசு

இந்திய அறிவியல் அமைப்பைப் போற்றும் விதமாக கரக்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் சார்பில் நேரு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின் 2021-ம் ஆண்டின் நாட்காட்டி மூலம் சமஸ்கிருதத்தைத் திணிக்கிற முயற்சியை மேற்கொண்டு வருகிறது என்றும் சமஸ்கிருத மொழியின் சிறப்புகளை விளக்கும் வகையில் அறிவியல், அண்டவியல், வானியல், ஜோதிடம், ஆயுர்வேதம், கணிதம், வாஸ்து சாஸ்திரம், அர்த்தசாஸ்திரம், வேதியியல், சுற்றுச்சூழல் போன்ற துறைகளின் முன்னோடிகளான சப்த ரிஷிகள், விஞ்ஞானிகள் மற்றும் இதிகாசம், புராணம், வேதம், உபநிடதங்களின் சாராம்சங்களுடன் இந்த நாள்காட்டி தயார் செய்யப்பட்டுள்ளது என்றும் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

இதில், ஆதிகால சப்த ரிஷிகளின் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறும் அவர், இந்த நாள்காட்டி மூலம் சமஸ்கிருத கலாச்சாரத்தைத் திணித்து, இன்றைய மாணவர்களுக்கு அறிவியல் பார்வையை வழங்க மறுக்கிற போக்கில் பகுத்தறிவிற்கு எதிராக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறன என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

தொல்லியல் துறையில் தமிழ் – பணிந்தது மத்திய அரசு

மேலும், “சுதந்திர இந்தியாவில் பண்டித நேரு மேற்கொண்ட முயற்சியின் விளைவாக கரக்பூர், சென்னை உள்ளிட்ட ஐந்து இடங்களில் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் தொடங்கப்பட்டது. இதன்மூலம் மாணவர்கள் அறிவியல் அறிவையும், ஆராய்ச்சியையும் மேற்கொண்டு இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு அதைப் பயன்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டது.” என்று கே.எஸ்.அழகிரி நினைவுப்படுத்தியுள்ளார்.

ஆனால், இந்தியத் தொழில்நுட்ப கழகங்கள் எதற்காகத் தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை முற்றிலும் சிதைக்கிற வகையில் மத்திய பாஜக அரசு சமஸ்கிருத மொழியைப் புகுத்தி நடவடிக்கை எடுத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘தமிழ்மொழி எதிர்ப்பில் மத்திய அரசுக்கு ஆதரவளிக்கும் அதிமுக ‘ – கனிமொழி குற்றச்சாட்டு

இந்தியாவில் சமஸ்கிருத மொழியைப் பரப்புவதற்காகக் கடந்த மூன்றாண்டுகளில் ரூ.643.83 கோடியை பாஜக அரசு செலவழித்திருக்கிறது என்றும் செம்மொழி தகுதி பெற்றுள்ள தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய ஐந்து மொழிகளுக்கு மொத்தமாக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.29 கோடி மட்டும்தான் என்றும் கே.எஸ்.அழகிரி சுட்டிக்காட்டியுள்ளார்.

“இதை ஒப்பிடும்போது 22 மடங்கு கூடுதலாகச் சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலமாக தலைநகர் டெல்லியில் ராஷ்ட்ரிய சமஸ்கிருத சன்சதன் என்கிற அமைப்பை உருவாக்கி, அதன்மூலமாக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சமஸ்கிருத மொழி பேசுபவர்கள் எண்ணிக்கை 28,821 மட்டுமே. அதாவது, 121 கோடி மக்கள் தொகையில் 0.00198 சதவிகிதம்தான். இதற்குதான், மக்கள் வரிப் பணத்திலிருந்து மத்திய பாஜக அரசு பயன்பாட்டில் இல்லாத சமஸ்கிருத மொழியை வளர்க்க பாரபட்சமாக நிதியை ஒதுக்கி வருகிறது.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு நாள் : மாநிலத்தின் இறையாண்மையைக் காப்போம் – தோழர் தியாகுவின் சிறப்புக் கட்டுரை

அதேநேரத்தில் செம்மொழி தகுதிபெற்ற தமிழ் மொழிக்குக் கடந்த மூன்றாண்டுகளில் மொத்தம் ரூ.22.94 கோடி தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றும் இதன்மூலம் மத்திய பாஜக அரசு தமிழ் உள்ளிட்ட மொழிகள் மீது எத்தகைய மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்து கொண்டு வருகிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை என்றும் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடி பொதுக்கூட்டங்களில் திருக்குறளையும், மகாகவி பாரதியின் கவிதைகளையும் மேற்கோள் காட்டிவிட்டு, தமிழ் மொழியை வளர்க்க நிதியை ஒதுக்காமல் புறக்கணிப்பதை விட இரட்டை வேடம் வேறு எதுவும் இருக்க முடியாது என்று குறிப்பிடும் அழகிரி, “இதன் மூலம் தமிழ் மொழி மீது பற்று இருப்பதைப் போலப் பிரதமர் மோடி கண்துடைப்பு நாடகம் நடத்தி வருகிறார். இதைத் தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதை அப்பட்டமான தமிழ் விரோதப் போக்காகவே கருதுகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

6 மாநிலங்களில் புதிய கல்விக்கொள்கை – அமைச்சரவை ஒப்புதல் – அடுத்தது தமிழ்நாடு

எனவே, இந்தி, சமஸ்கிருதத் திணிப்பையும், இதற்காக மத்திய அரசு நிதியை வாரி வழங்குவதையும், தமிழ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட மொழிகளைப் புறக்கணிப்பதாக கூறி, இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்