Aran Sei

பிர்பூம் வன்முறை: ‘குஜராத் படுகொலைகளை மறந்து, முதலைக் கண்ணீர் வடிக்கிறது பாஜக’ – திரிணாமூல் காங்கிரஸ் விமர்சனம்

மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள போக்டுய் கிராமத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட எட்டு பேர் எரித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணையில் தனது அதிகாரத்தைச் செலுத்த  பாஜக முயல்வதாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

மறுபுறம், மார்ச் 22ஆம் தேதி நடந்த இச்சம்பவத்திற்குப் பிறகு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியானது அனைத்து நம்பகத்தன்மையையும் இழந்துவிட்டதாக எதிர்க்கட்சியான பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

திரிணாமூல் பஞ்சாயத்து தலைவர் கொல்லப்பட்ட சிறிது நேரத்தில் 8 வீடுகளுக்கு தீ வைப்பு -2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு

இது குறித்து, நேற்று (மார்ச் 27), கல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ், “பல ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் நடந்த படுகொலைகளை பாஜக மறந்துவிட்டது. போக்டுய் சம்பவத்திற்காக இப்போது முதலைக் கண்ணீர் வடிக்கிறது. இதில், ஏற்கனவே உடனடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

“பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசியல் பாரபட்சமின்றி நீதியை உறுதி செய்வதில் மாநில அரசு உறுதியாக உள்ளது என்பதை மீண்டும் கூறுகிறோம். சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குள்ளே முதலமைச்சர் மம்தா பானர்ஜி சம்பவம் நடந்த அப்பகுதிக்கு சென்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்தார்” என்று அவர் கூறியுள்ளார்.

மேற்கு வங்கம்: பிர்பூம் கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணை – கல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு

“நியாயமான, பாரபட்சமற்ற, விசாரணை சிபிஐயால் நடத்தப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. நாங்கள் எல்லா வழிகளிலும் சிபிஐக்கு ஒத்துழைக்கிறோம். இருப்பினும், கடந்த ஓரிரு நாட்களாக, பாஜக தனது சொந்த அரசியல் நலனுக்காக சிபிஐயின் விசாரணையில் தன்னுடைய செல்வாக்கை செலுத்த முயல்கிறது. இதை நாங்கள் எதிர்க்கிறோம்” என்று குணால் கோஷ் குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் 25 அன்று, கல்கத்தா உயர் நீதிமன்றம் பிர்பூம் வன்முறை தொடர்பான விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைத்ததோடு, ஏப்ரல் 7ஆம் தேதிக்குள் இவ்விசாரணை குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்க காலக்கெடு விதித்தது. அதைத் தொடர்ந்து, அடுத்த நாள் சிபிஐ தனது விசாரணையை தொடங்கியது.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்