Aran Sei

‘ஒன்றிய அரசின் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்ற அரசியல் திட்டம் நிறைவேறாது’ – திரிணாமூல் காங்கிரஸ்

ந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தி திணிக்கும் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் எந்த முயற்சியும் எதிர்க்கப்படும் என்று மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இந்தி அல்லாத பிற மொழிகளைப் பேசும் இந்திய மாநிலங்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ளும் போது ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார்.

இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்று குறிப்பிட்டுள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, “அமித் ஷாவின் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்ற அரசியல் திட்டம் நிறைவேறாமலேதான் போகும். இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்க அமித்ஷாவும், பாஜகவும் முயன்றால் எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடும். பன்முகத்தன்மை நிறைய உள்ள இந்நாட்டு மக்கள் இதை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்” என்று கூறியுள்ளது.

இந்தி மொழி பற்றிய அமித்ஷாவின் கருத்து – இந்தி ஏகாதிபத்தியம் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்

“இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு கூட இந்தி பேசாத மாநிலங்கள் இந்தி மொழியை ஏற்கும் வரை இந்தியை திணிக்க மாட்டோம் என கூறியிருந்தார்” என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சவுகதா ராய் நினைவூட்டியுள்ளார்.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான சுகேந்து சேகர் ரே, “இந்தி மொழியை தேசிய மொழியாக முன்னிறுத்தும் முயற்சிகள் அரசியலமைப்புச் சட்டத்தின் ஆன்மாவிற்கே எதிரானது. இந்தி ஏகாதிபத்தியத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு நாங்கள் எதிரானவர்கள். இப்படித்தான் பாசிசம் வளர்கிறது. இந்தியைத் திணிப்பது என்பது கூட்டாட்சிக் கொள்கைகளுக்கே எதிரானது” என்று தெரிவித்துள்ளார்.

Source: PTI

மாநிலங்கள் தங்களுக்குள் பேச இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறிய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு ஊடகவியளாலர் ஜீவசகாப்தன் எதிர்வினையாற்றியுள்ளார்.

தமிழுக்கு முன்னடி இந்தி ஒன்னுமே இல்ல… மேலும் தெரிந்துகொள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்