Aran Sei

பிரசாந்த் கிஷோருக்கு நெருக்கடி – போர்க்கொடி தூக்கிய திரிணாமுல் தலைவர்கள்

Image Credits: The Print

திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது. அக்கட்சிக்குள் பல மூத்த தலைவர்களும் அமைச்சர்களும் தேர்தல் ஆலோசனையாளர் பிரசாந்த் கிஷோர் மற்றும் அவரது குழுவுக்கு எதிராகக் கோபத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

2021-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக, திரிணாமுல் காங்கிரஸ், பிரசாந்த் கிஷோரின் நிறுவனமான இந்திய அரசியல் நடவடிக்கைக் குழுவை(ஐபிஏசி) நியமித்துள்ளது. இந்த நியமனம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், ஜல்பைகுரி மாவட்டம், மேனகுரியில் மூன்றாவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினராக உள்ள அனந்தா டெப் கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது பேசிய அவர், “பிரசாந்த் கிஷோரின் குழு நியமிக்கப்பட்ட பின்னர், கட்சியின் நிறுவன வலிமை பெரிதும் தடைபட்டுள்ளது. அவரது குழு, பிரிவை உருவாக்கி, பிரிவுவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. எனது கவலையை வெளிப்படுத்தி மம்தா பானர்ஜிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பராக்பூரைச் சேர்ந்த மற்றொரு மூத்த சட்டமன்ற உறுப்பினர் சில்பத்ரா தத்தாவும் பிரசாந்த் கிஷோருக்கு எதிராக அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். வரவிருக்கும் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“ஒரு தனியார் நிறுவனம் பணத்திற்காகத் தேர்தல் திட்டங்களை வகுக்க இங்கு வந்துள்ளது. அவர்கள் இப்போது என்னிடம் வாக்களிப்பதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்று சொல்கிறார்கள். அதை அவர்களே கவனித்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்கள். என்னால் இனி இந்தச் சூழலுடன் ஒத்துப்போக முடியாது” என்று சில்பத்ரா தத்தா, கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் கூறியுள்ளார்.

ஐ-பிஏசி குழுவினர் சில்பத்ரா தத்தாவுடன் பேசி இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முயற்சித்துள்ளனர். இருப்பினும், சில்பத்ரா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மிஹிர் கோஸ்வாமி, “ஒரு ஒப்பந்தக்காரர் கட்சியைக் கட்டுப்படுத்தினால் கட்சியின் அமைப்பு நிச்சயமாகக் குலைத்துவிடும்” என்று கூறினார். மிஹிர் கோஸ்வாமி, நவம்பர் 27 அன்று, பாஜகவில் இணைந்துள்ளார்.

“பல தலைவர்கள் எங்களுடன் ஒத்துழைக்கவில்லை, சிலர் எந்த வகையிலும் எங்களுக்கு உதவ வேண்டாம் என்று தொண்டர்களிடம் கூறுகிறார்கள். சில எம்எல்ஏக்கள் எங்கள் அழைப்புகளுக்குப் பதிலளிப்பதில்லை. நாங்கள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் கலந்து கொள்ள மறுக்கிறார்கள். இந்தப் பிரச்சினைகள் மாநிலம் முழுவதும் பல பகுதிகளில் நடந்து வருகின்றன” என்று ஒரு ஐ-பிஏசி நிர்வாகி தி வயர் இணையதளத்திடம் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்