Aran Sei

‘வடஇந்தியாவின் “ஜெய் ஸ்ரீராம்” மேற்கு வங்கத்தின் முழக்கமல்ல. ஜெய் வங்காளமே எங்களுடையது’ – திரிணாமூல் காங்கிரஸ்

’ஜெய் ஸ்ரீராம்’ எங்கள் முழக்கம் அல்ல, எங்கள் முழக்கம் ’ஜெய் வங்காளம்’தான் என்றும் வடஇந்திய பண்பாட்டை மேற்கு வங்கத்தில் இறக்குமதி செய்யப் பாஜக முயல்கிறது என்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

ஜனவரி 23-ம் தேதி, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவகத்தில் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 124-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

’ஜெய் ஸ்ரீராம்’ முழக்கம்; பேச்சை தவிர்த்த மம்தா: பிரதமர் முன்பாக நடந்த சம்பவத்திற்கு எழும் கண்டனம்

அந்த நிகழ்ச்சியில் பேசுவதற்கு மம்தா பானர்ஜி அழைக்கப்பட்டபோது, கூட்டத்தில் ஒரு பகுதியினர், ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கம் எழுப்பினர்.

அதைத் தொடர்ந்து பேசிய மம்தா பானர்ஜி, “என்னை இங்கு அழைத்தபின்னர் என்னை அவமதிக்கக் கூடாது. இது ஒரு அரசியல் கட்சியின் நிகழ்ச்சி இல்லை. அரசு நிகழ்ச்சிக்கென்று ஒரு கண்ணியம் இருக்கிறது. நீங்கள் ஒருவரை அரசு நிகழ்ச்சிக்கு அழைத்தால், நீங்கள் அவர்களை அவமதிக்கக் கூடாது.”  என்று கண்டனம் தெரிவித்தார்.

‘ மம்தா பானர்ஜியின் அகண்ட வங்கதேசம் ’ – பாஜகவின் பிளவுவாத அரசியலுக்கு திரிணாமூல் கண்டனம்

மேலும், “நான் எதையும் பேச விரும்பவில்லை. நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரதமருக்கும், மத்திய அமைச்சருக்கும் என் நன்றி. ஜெய்ஹிந்த், ஜெய் பெங்கால்.” என்று கூறி பேச்சை முடித்துக்கொண்டார்.

இதுகுறித்து, நேற்று (ஜனவரி 29) திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை கொறடாவான சுகேந்து சேகர் ரே, “இந்தச் சம்பவம் முதலமைச்சருக்கு மட்டும் நேர்ந்த அவமரியாதை அல்ல. நேதாஜியின் பெருமைகளுக்கும் நேர்ந்த அவமானம் ஆகும்.” என்று கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

’என்னை நோக்கி துப்பாக்கியை காட்டினால், என்னுள் இருக்கும் ஆயுதகிடங்கையே உங்களுக்கு காட்டுவேன்’ – மம்தா பானர்ஜி

“இது ஒரு ராம பக்தரின் தகுதியல்ல. ராம் நவமி நிகழ்ச்சியில் யாராவது வேறுசில முழக்கங்களை எழுப்பினால், அவர்களுக்கு எப்படி இருக்கும்? என்னைப் பொறுத்தவரை, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் 125 வது பிறந்தநாளில், நேதாஜிக்கும் நம்முடைய தாய்நாட்டின் சுதந்திரத்திற்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த ஆசாத் ஹிந்த் ஃபாஜின் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நாள். அன்று எழுப்பப்பட வேண்டிய முழக்கம் ஜெய்ஹிந்த் மட்டுமே.” அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இது போன்ற நிகழ்ச்சிகளில் அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஏனெனில், பிரதமர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நிகழ்ச்சி அது. அன்று பிரதமரின் கண்ணியத்தை கணக்கிட்டிருக்க வேண்டும் நீங்கள். வேறு எங்கு வேண்டுமானாலும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ முழக்கங்களை எழுப்பலாம். வேறு எந்தச் சந்தர்ப்பத்தில் வேண்டுமானாலும் எழுப்பலாம். அதில், எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் நேதாஜிக்கும் இந்திய தேசிய இராணுவத்திற்கும் நம் நாடே அஞ்சலி செலுத்தும் நாளில், இவர்கள் எவ்வாறு அனுமதிக்கப்பட்டனர்? ” என்று சுகேந்து சேகர் ரே கேள்வி எழுப்பியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

விவசாய சட்டங்களை எதிர்த்து மேற்கு வங்க சட்டப்பேரவையில் தீர்மானம் – எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

மேலும், “பாஜக எழுப்பும் மத முழக்கங்கள், இதற்கு முன்னர் வங்காளத்தின் அரசியல் வரலாற்றில் என்றுமே எழுப்பப்பட்டதில்லை. நீங்கள் 1952 ஆம் ஆண்டு முதல் இன்று வரை நடைபெற்ற தேர்தல்களை ஆராய்ந்து பார்த்தால், இதுபோன்ற மத முழக்கங்கள் எந்தக் கட்சியினாலும் எழுப்பப்படவில்லை. அவர்கள் (பாஜக) வட இந்தியாவின் பண்பாட்டை இங்கு இறக்குமதி செய்ய முயல்கிறார். இந்து மத முழக்கங்கள் வங்காள அரசியலுக்கு அந்நியமானது.”  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை இந்துகளுக்கு எதிரான கட்சி என்று சித்தரிக்க பாஜக முயல்கிறது. அதற்குதான் இந்த முழக்கத்தைப் பாஜக ஒரு தந்திரமாகப் பயன்படுத்துகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. நாங்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்திற்கு  எதிரானவர்கள் அல்ல. ஆனால் வங்காளத்திற்கென்று பிரத்தியேக முழக்கங்கள் உள்ளன. ஜெய் துர்கா, ஜெய் மா காளி போன்றவை.”  என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் பாஜக படுதோல்வியடையும் – பிரஷாந்த் கிஷோர் சவால்

மேலும், “ஒவ்வொரு பேரணியிலும், எங்கள் கட்சி தலைவர்கள் ஜெய் வங்காளம் என்று முழங்குகிறார்கள். இந்த முழக்கமானது வங்காளத்தை இணைக்கிறது. வங்காளிகளுக்கு அவர்களின் பெருமையை உணர வைக்கிறது. இதுவே நாங்கள் நடைபோடும் நல்ல அரசியல் பாதை.” என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை கொறடாவான சுகேந்து சேகர் ரே குறிப்பிட்டுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்