காஷ்மீரில் நிலவும் பிரச்சனைகள்குறித்து ‘இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ என குறிப்பிட்டு தனது முதுநிலை பட்டப்படிப்பு ஆய்வறிக்கை சமர்ப்பித்த மானவர் மீதும், பேராசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலதுசாரிகள் கூறி வருவதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
டாடா கல்வி நிறுவனத்தில் முதுநிலை பெண்ணியல் படித்து வரும் அனன்யா குண்டு, ‘மோதலுக்கான காரணங்கள்: இராணுவமயமாக்கல், மோதல் மற்றும் கொரோனா தொற்றுநோயால் இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அதிகரித்துள்ள வன்முறைகள்” என்ற தலைப்பில் ஆய்வேடு ஒன்றை சமர்பித்திருந்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த ஆய்வேட்டின் படம் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து வலது சாரி ஆதரவாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாகவும், ஒ.பி.ல் ஊடகம் என்ற வலது சாரி இணையதளம் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளதாகவும் தி வயர் செய்தி தெரிவிக்கிறது.
இதுகுறித்து தெரிவித்துள்ள டாடா கல்வி நிறுவனம், “டாடா நிறுவனம் இந்நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு மதிப்பளிக்கிறது. இதற்கு ஊறுவிளைவிக்கும் எந்த கருத்துக்களையும் ஏற்காது. இந்தியாவின் ஒரு கல்வி நிறுவனம் என்ற வகையில், முக்கியமான பிரச்சனைகள் உட்பட அனைத்து கருப்பொருள்களிலும் அறிவியல்பூர்வ விசாரணை மற்றும் நெறிமுறையான ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்புகிறது. இந்த இரண்டு அம்சங்களும் இந்த குறிப்பிட்ட விவகாரத்தில் டாடா நிறுவனத்தால் விசாரிக்கப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதே போன்று கடந்த 2015 ஆம் ஆண்டு காஷ்மீர் குறித்து வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் திபீஷ் ஆனந்த்தை டாடா நிறுவனம் பேச அழைத்த போதும் அந்நிறுவனத்தின் மீது கடுமையான எதிர்ப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.