Aran Sei

திருநெல்வேலி புத்தகக் கண்காட்சி: இந்துத்துவாவினரின் எதிர்ப்பால் திரையிட முடியாமல்போன ‘இன்ஷா அல்லா’ திரைப்படம்

பொருநை புத்தக திருவிழாவில் திரையிட இருந்த ‘இன்ஷா அல்லா’ திரைப்படம் இந்துத்துவவாதிகளின் எதிர்ப்பின் காரணமாக திரையிட மறுப்புத் தெரிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.

திருநெல்வேலியில் 5வது பொருநை புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக திரையிடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. உலகத் திரைப்படங்கள் மட்டுமல்ல தமிழ்த் திரைப்படங்களும் திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் லெனின் பாரதி இயக்கிய ’மேற்குத் தொடர்ச்சிமலை’, ஃப்ராங்ளின் இயக்கிய ‘ரைட்டர்’ உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டுள்ளன. இஸ்லாமிய மக்களின் வாழ்வியலைப் பேசும் படமான இன்ஷா அல்லா படமும் திரையிட இருந்தது. இந்தப் படத்தை இயக்கியவர் உலக சினிமா பாஸ்கரன். இன்று (27.3.2022) புத்தகத் திருவிழாவில் நடைபெற இருந்த திரையிடலில் ’இன்ஷா அல்லா’ படத்தை திரையிடக் கூடாது என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

இது குறித்து அரண்செய்- யிடம் பேசிய படத்தின் இயக்குநர் பாஸ்கரன், “என்னுடைய படம்(இன்ஷா அல்லா) ஏறத்தாழ 50 விருதுகளைப் பெற்றுள்ளது. படம் திரையிடப்படுவதற்கான பட்டியலில் இந்தப் படமும் இருந்தது. திரையிடல் நிகழ்வை ஆவணப்பட இயக்குநர் ஆர். ஆர். சீனிவாசன் ஒருங்கிணைத்தார். இந்தப் படத்தை திரையிடக்கூடாதென இந்துத்துவ இயக்கத்தைச் சேர்ந்த சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்  போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் படத்தை திரையிடக்கூடாதென உத்தரவு வந்துள்ளது. மேலும் அதற்குப் பதிலீடாக மாணவர்களோடு கலந்துரையாடல் நிகழ்வை ஏற்படுத்தினர்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது. “இத்திரையிடல் நிகழ்வுக்குப் பாதுகாப்பு அளித்துத் திரையிடலை நடத்தி இருக்க வேண்டும். ஆனால் நிகழ்வை ரத்து செய்தது கெடுவாய்ப்பானது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் கவனம் கொண்டு வலதுசரி குழுக்களை கட்டுப்படுத்த வேண்டும்” என்று அரண்செய் – யிடம் கூறினார்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்