Aran Sei

‘எங்களை மிரட்டவும் முடியாது, வாங்கவும் முடியாது’ – டைம் இதழ் அட்டையில் கர்ஜிக்கும் விவசாய பெண்கள்

ர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பிரபல அமெரிக்க இதழான டைம், அதன் மார்ச் மாத பதிப்பின் முகப்பு அட்டையில், இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துக்கொண்டுள்ள  பெண்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

இந்திய விவசாயிகள் போராட்டத்தின் முன்வரிசைப் படை என்ற தலைப்பிட்ட அட்டைப்படத்தில், டெல்லி திக்ரி எல்லையில் நடக்கும் போராட்டத்தில் பங்குகொண்ட சுமார் 20 பெண்களின் படங்களை வெளியிட்டுள்ளது.

எங்களை மிரட்டவும் முடியாது. எங்களை வாங்கவும் முடியாது – இந்தியாவின் விவசாயிகள் போராட்டத்தைத் தலைமை தாங்கும் பெண்கள்என்ற தலைப்பிடப்பட்டுள்ள கட்டுரையில்,  மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி, டெல்லியின் பல்வேறு பகுதிகளில்,  2020 ஆம் நவம்பர் மாதம் முதல் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்வரை போராட்டம் நடைபெற்ற விதம், போராட்டக்களத்தில் இருந்து பெண்கள் மற்றும் வயதானவர்களை அப்புறப்படுத்துங்கள் என வழக்குரைஞர்களிடம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கோரியிருந்தது ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டிருந்தன.

Photo credit: The Time

உச்சநீதிமன்ற நீதிபதிக்குப் பதிலளிக்கும் விதமாக,  “பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள  கிராமப்புறத்தை சேர்ந்த [பெரும்பாலான பெண் விவசாயிகள் – மேடைகளில் ஏறி மைக்கை பிடித்து, ஒருமனதாக ’திரும்பிப் போக முடியாது’என்று கர்ஜித்தார்கள்,” என நிலஞ்சனா பௌமிக் எழுதியுள்ள கட்டுரையில் இடம்பெற்றிருக்கிறது.

அந்தக் கட்டுரையில், ”போராட்டத்தில் பெண்கள் சரிநிகர் பங்குடையவர்கள் என்று கருதாமல், போராட்டக் களத்தில்  சமையல் மற்றும் துப்புரவு பணியை மேற்கொள்பவர்கள் எனக் கருதுவது ஏமாற்றமளிக்கிறது. ஆண்களுடன் நாங்களும் வயலில் இறங்கி பாடுபடும் நிலையில், நாங்கள் விவசாயிகள் இல்லை என்றால்? நாங்கள் யார்?” எனப் பெண்கள் கேள்வி எழுப்பியது மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, டைம் இதழின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஹரியானாவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் சுதேஷ் கோயாத், போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே திக்ரி எல்லைப்பகுதியிலிருந்து வருகிறார். பெண் விவசாயிகளை அணிதிரட்டவும், ஜனவரி 18 ஆம் தேதி பெண்கள் உழவர் தினமாக அங்கீகரிக்க ஏற்பாடு செய்யவும், அவர் உதவினார்” இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? எனப் பதிவிடப்பட்டிருந்தது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்