எல்லை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு எதிராக குப்கர் கூட்டணி பேரணி நடத்தவுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மூன்று முன்னாள் முதலமைச்சர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, இன்று(ஜனவரி 1), தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான உமர் அப்துல்லா, “காலை வணக்கம். 2022க்கு உங்களை வரவேற்கிறேன். சட்டவிரோதமாக மக்களை அவர்களின் வீடுகளில் கைது செய்து வைக்கும் அதே ஜம்மு காஷ்மீர் காவல்துறையினருடன் ஒரு புத்தாண்டு இன்று. சாதாரண ஜனநாயக நடவடிக்கைகளால் ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் மிகவும் அச்சமடைந்துள்ளது” என்று ட்வீட் செய்துள்ளார்.
Good morning & welcome to 2022. A new year with the same J&K police illegally locking people in their homes & an administration so terrified of normal democratic activity. Trucks parked outside our gates to scuttle the peaceful @JKPAGD sit-in protest. Some things never change. pic.twitter.com/OeSNwAOVkp
— Omar Abdullah (@OmarAbdullah) January 1, 2022
அமைதிவழியிலான குப்கர் கூட்டணியின் போராட்டத்தைத் தடுக்க எங்கள் வீட்டு வாயில்களுக்கு வெளியே இராணுவ வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் சில விஷயங்கள் ஒருபோதும் மாறாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“சட்டவிரோத காவல்துறையின் அரசைப் பற்றி பேசுங்கள். என் தந்தையின் வீட்டை எனது சகோதரி வீட்டுடன் இணைக்கும் வாயிற்கதவை காவல்துறை பூட்டியிருக்கிறது” என்று அவரது தந்தையும் முன்னாள் முதலமைச்சருமான ஃபரூக் அப்துல்லாவை குறித்து கூறியுள்ளார்.
குப்கர் கூட்டணியின் செய்தித் தொடர்பாளரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவருமான எம்.ஒய். தாரிகாமி, “ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அமைதியான போராட்டத்தைக்கூட அனுமதிக்க பயப்படுகிறது. மக்கள் தங்கள் கருத்தை பொதுமக்கள் முன் வைக்கக் கூட அனுமதிக்கப்படாதது இங்குள்ள மோசமான நிலைமையையே காட்டுகிறது” என்று விமர்சித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சரும் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தியும் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
“என் வீட்டிற்கு வெளியேயும் ஒரு இராணுவ வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 20 அன்று, ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில், ஜம்முவுக்கு 43 தொகுதிகள் (முன்னதாக 37) என்றும், காஷ்மீருக்கு 47 தொகுதிகள் (முன்னதாக 36) என்றும் எல்லை நிர்ணய ஆணையம் பரிந்துரைத்தது.
அடுத்த நாளான நேற்று முன் தினம்(டிசம்பர் 21), ஜம்முவில், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா தலைமையில் நடந்த கூட்டத்தில், மக்கள் ஜனநாயக கட்#IndianArmyசியின் தலைவர் மெஹபூபா முப்தி உள்ளிட்ட குப்கர் கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டு பரிந்துரை குறித்து விவாதித்தனர். இப்பரிந்துரைகளை எதிர்த்து, ஜனவரி 1 அன்று, அமைதிவழிப் போராட்டம் நடத்தவுள்ளதாக கூட்டத்திற்கு பிறகு குப்கர் கூட்டணி தெரிவித்தது.
முன்னர், எல்லை நிர்ணய ஆணையம் குறித்து பேசியிருந்த மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, எல்லை நிர்ணய ஆணையம் பாஜகவின் அஜண்டாவிற்காக செயல்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.
“எல்லை நிர்ணய ஆணையத்தைப் பொறுத்த வரையில், அது பாஜகவின் ஆணையம். சிறுபான்மையினருக்கு எதிராக பெரும்பான்மையை உயர்த்திக்காட்டி, மக்களை மேலும் வலுவிழக்கச் செய்வதே அவர்களின் முயற்சி. அவர்கள் பாஜகவுக்கு நன்மை செய்யும் வகையில் சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்புகிறார்கள்” என்று மெகபூபா முப்தி குற்றஞ்சாட்டியிருந்தார்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.