Aran Sei

திக்ரி எல்லைப்பகுதியில் விபத்து – டிராக்டர் மோதி மூன்று பெண் விவசாயிகள் உயிரிழப்பு

திக்ரி எல்லைப்பகுதியில் நடந்த விபத்தில் டிராக்டர் மோதி மூன்று பெண் விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம், மான்சா மாவட்டம், பிக்கி வட்டம் கிவா தயாலுவாலா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெண் விவசாயிகளான அமர்ஜித் கவுர்(58), குர்மைல் கவுர் (60) மற்றும் ஷிண்டேர் கவுர் (61) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரக்கூடிய போராட்டத்தில் பங்குபெற்றனர். இன்று அதிகாலை 6.15 மணியளவில்  ஊர் திரும்புவதற்காக புறப்பட்டுள்ளனர். திக்ரி எல்லைப்பகுதியில் விவசாயிகள் போராடும் இடத்திற்கு அருகிலுள்ள ஜாஜர் சாலையில் இருந்து ரயில் நிலையத்திற்கு போக ஆட்டோ பிடிப்பதற்கு நின்றிருந்தனர்.

‘திரிபுராவில் இஸ்லாமியர்கள் மீது கொடூர தாக்குதல்’ – பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா கண்டனம்

அப்போது  அதி வேகமாக வந்த டிராக்டர் ஒன்று  பெண் விவசாயிகளின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. சம்பவ இடத்திலேயே இரண்டு பெண் விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மூன்றாவது விவசாயியும் உயிரிழந்துள்ளார். மோதிய வாகனத்திலிருந்து அதன் ஓட்டுநர் தப்பிச் சென்று விட்டார்.  பகதூர்கார் நகர காவல்துறையினர் வாகனத்தைக் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.

ஜாஜர் நகரின் காவல் கண்காணிப்பாளர் வாசிம் அக்ரம் பேசுகையில், “முதற்கட்ட தகவலில் இது ஒரு விபத்து என்று தெரியவந்திருக்கிறது. தொடர் விசாரணையில் அது உறுதிப்படுத்தப்படும். சம்பவம் நடந்தபோது ஆறு பெண் விவசாயிகள் இருந்திருக்கிறார்கள். அவர்களில் இருவர் சம்பவ இடத்திலும் ஒருவர் மருத்துவமனைக்கு போகும் வழியிலும் உயிரிழந்திருக்கிறார்கள். ஓட்டுனர் தப்பிவிட்ட போதும் அடையாளம் கண்டுபிடித்து இருக்கிறோம். விரைவில் கைது செய்யப்படுவதை உறுதி செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி வாங்குவதற்கு வங்கியில் கடன் கோரிய ஒன்றிய அரசு – 500 கோடி டாலர்கள் கடன் கேட்டு விண்ணப்பம்

பாரதீய கிசான் யூனியன் எனும் விவசாய அமைப்பின் தலைவர் வசந்த கோத்த குரு பேசுகையில், “அந்த மூன்று பெண் விவசாயிகளும் தங்களின் வீட்டிற்கு திரும்பும்போது இந்த சோக நிகழ்வு நடந்திருக்கிறது. எங்களுக்கு இது பேரிழப்பு. காரணம் போராட்டம் துவங்கிய காலத்திலிருந்து அவர்கள் எங்களோடு பயணித்து இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

மற்றொரு விவசாய சங்கத் தலைவர் சிங்காரா சிங் மான் பேசுகையில், “காவல்துறை இந்த சம்பவத்தின் பிண்ணனியில் ஏதேனும் சதி உள்ளதா என்று வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை நடத்த வேண்டும். கடந்த 11 மாதங்களாக போராடி வரும் நாங்கள் சமீப காலத்தில் மிக அதிகமான வன்முறைகளுக்கு உள்ளாகிறோம். இதுகுறித்து இன்று மாலை விவசாய அமைப்புகள் இணைந்து விரிவான அறிக்கை அளிப்போம். இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு 10 லட்ச ரூபாய் நிதி உதவியும், அரசு வேலையும் வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

T20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக பதிவு – ஆக்ரா, உதைப்பூர் மற்றும் ஜம்முவில் 6 பேர் கைது

அண்மையில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உ.பி. யின் லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகள் மீது கார் ஏற்றிப் படுகொலை செய்த சம்பவத்தின் சுவடு மறைவதற்குள் நிகழ்ந்துள்ள இந்த மூன்று பெண் விவசாயிகளின் மரணம் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லி எல்லைப் பகுதியில் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source: the wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்