ஹரித்வார் கும்பமேளாவிற்கு சென்றவர்கள் கொரோனா தொற்றை பிரசாதம் போல மக்களுக்கு வழங்கவிடக்கூடாது என்றும் இதில் பக்தர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் மும்பை மேயர் கிஷோரி பெட்நேகர் எச்சரித்துள்ளார்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கங்கை நதிக்கரைகளில் நடைபெறும் கும்பமேளா விழா, உத்திரபிரதேச மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்று வருகிறது. ஒரு மாத காலம் நடைபெறும் இந்த விழாவில், கொரோனா பரவலையும் பொருட்படுத்தாது பல லட்சக்கணக்காணோர் கூடி வருகின்றனர். மேலும், இதில் பங்கேற்கும் பலர் கொரொனா தடுப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது போன்றவற்றை பின்பற்றுவதில்லை.
ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கி, இதுவரை 2000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது.
ஹரித்வார் கும்பமேளாவில் ஒரே நாளில் 13 லட்சம் பேர் நீராடல் : காற்றில் பறக்கும் கொரோனா கட்டுப்பாடுகள்
இந்நிலையில், இது தொடர்பாக, நேற்று (ஏப்ரல் 17) ஏஎன்ஐ-யிடம் பேசிய மும்பை மேயர் கிஷோரி பெட்நேகர் , “ஹரித்வார் கும்பமேளாவுக்கு சென்றிருந்த பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்களில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கும்பமேளாவில் பங்கேற்ற பக்தர்கள் பலரும் தற்போது தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.
#WATCH | "Those returning from Kumbh Mela to their respective states will distribute Corona as 'prasad'," says Mumbai Mayor Kishori Pednekar pic.twitter.com/P9UBVBv1mN
— ANI (@ANI) April 17, 2021
“அவ்வாறு தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பியவுடன் வீடுகளில் தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும். மக்களுக்கு கொரோனா தொற்றை கும்பமேளா பிரசாதமாக கொடுத்து விடக் கூடாது. இந்த விவகாரத்தில் பக்தர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.” என்று கிஷோரி பெட்நேகர் வலியுறுத்தியுள்ளதார்.
மேலும், கும்பமேளாவில் இருந்து வருபவர்களை அவர்களின் சொந்த செலவிலேயேதான் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் மும்பையிலும் இதையே கடைப்பிடிக்கவுள்ளோம் என்றும் ஏஎன்ஐ-யிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கும்பமேளா சென்று திரும்பும் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென கர்நாடக சுகாதாரத்துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.