Aran Sei

பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் காலமானார் – அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய கோரிக்கை

மிழக பண்பாட்டுத் தளத்தில் மிகச் சிறந்த ஆய்வுகளை மேற்கொண்ட மூத்த தமிழறிஞர் தொ.பரமசிவன் காலமானர். அவருடைய உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தொ.பரமசின் மறைவு குறித்து அந்த சங்கத்தின் (தமுஎகச) பொதுச் செயலளார் ஆதவன் தீட்சண்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூத்த தமிழறிஞரும் ஆழ்ந்த பெரியாரியச் சிந்தனையாளருமான அய்யா தொ.பரமசிவன் அவர்களின் மறைவு தமிழ் ஆய்வுலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். உறுதிமிக்க பெரியாரியவாதியான அவர் தற்செயலாக பெரியாரின் நினைவுநாளிலேயே காலமாகியிருக்கிறார்” என்று கூறப்பட்டுள்ளது.

தொ.பரமசிவன் பேராசிரியராக பணியாற்றிய காலத்தில், ஆசிரியர் போராட்டங்களில் அவர் பங்கேற்றதை தமுஎகச நினைவு கூர்ந்துள்ளது.

இது குறித்து அந்த அறிக்கையில், “சிவகங்கை மாவட்டம், இளையாங்குடியில் டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றிய நாட்களில் கல்லூரி ஆசிரியர் சங்கமாகிய மூட்டாவின் இணைச்செயலாளராகப் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். மூட்டா இயக்க வரலாற்றின் மிக முக்கியமான போராட்டமான ஜாகிர் உசேன் கல்லூரிப்போராட்டத்தில் முன்னணிப்பாத்திரம் வகித்தவர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொ.பரமசிவன் அவர்களின் ஆய்வுக்கட்டுரைகள் பலவும் மார்க்சிய ஆய்வுநெறியின் அடிப்படையில் இருக்கும் என்று கூறியுள்ள தமுஎகச, தமிழ் உலகத்திற்கு அவர் வழங்கிய ஆய்வு நூல்களையும் பட்டியலிட்டுள்ளது.

“நாட்டுப்புறத் தெய்வங்கள் மீது தமிழ்ச்சமூகத்தின் கவனத்தைத் திருப்பிய முன்னோடிகளில் ஒருவராகத் திகழும் தொ.ப. அவர்களின் பண்பாட்டு அசைவுகள், உரைகல், தெய்வம் என்பதோர், சமயங்களின் அரசியல் போன்ற நூல்வரிசை இந்துத்துவ அரசியலுக்கு எதிரான வலுவான வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டவை” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்ற தொ.பரமசிவன், பேராசிரியராகவும் ஒரு நிர்வாகியாகவும் நேர்மையின் இலக்கணமாக வாழ்ந்தார் என்று இன்றுவரை அவரது சக பேராசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள் என தமுஎகசவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“நாட்டின் பன்முகத்தன்மையை அழித்து ஒற்றைத்துவப்படுத்தும் வரலாற்று மோசடிகள் அரசின் துணையோடு விஷமெனப் பரவும் இக்காலத்தில் வரலாற்றின் உண்மைத்தன்மையை துணிவுடன் எடுத்துரைக்க முன்னிலும் கூடுதலாய் தேவைப்பட்ட முனைவர் தொ.ப. காலமாகியுள்ளார்” என தொ.பரமசிவன் மறைவு குறித்து தமுஎகச வருத்தத்தை தெரிவித்துள்ளது.

தொ.பரமசிவன் அவர்களின் ஆய்வுநூல்களையும் அறிவார்ந்தச் செயல்பாடுகளையும் பரவலாக்குவதே அவருக்குச் செலுத்தப்படும் பொருத்தமான அஞ்சலியாக அமையுமென தமுஎகச கூறியுள்ளது.

இறுதியா, “மதிக்கத்தக்க பங்களிப்பினைச் செய்து காலமாகிற தமிழறிஞர்களையும் கலை இலக்கிய ஆளுமைகளையும் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யும் நடவடிக்கையை இவரிலிருந்தேனும் தொடங்க வேண்டும்” என தமிழக அரசை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்