தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்று சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் தமிழக முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த 10 ஆண்டுகளாக அரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியம் பெற்று பணிபுரியும் பனிரெண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த ஐந்து நாட்களாகக் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் போராட்டத்திற்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.
மீண்டும் நாடாளுமன்றத்தில் வெடித்தெழுந்த மஹுவா – அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
‘அனைவருக்கும் கல்வி திட்டத்தின்’ கீழ் கடந்த 2012 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்கள் ரூ 5000 தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட்தாகத் தெரிவித்த அவர், அவர்களில் தற்போது 12917 பேர் மட்டுமே பகுதி நேர ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர் என்றும் 10 ஆண்டுகளை கடந்த நிலையிலும் இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படாததால் இவர்களுக்குக் காலமுறை ஊதியம் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.மேலும், ரூ 7700/ மட்டுமே தொகுப்பு ஊதியமாகப் பெற்று வருவதாகவும், இதனால் இவர்களின் குடும்பங்கள் மிகுந்த இன்னல்களைச் சந்தித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
குடியரசு தின டிராக்டர் பேரணி வன்முறை – நடிகர் தீப் சித்துவை கைது செய்த டெல்லி காவல்துறை
மேலும் “இவர்கள் பெரும்பாலும் ஏழை எளிய விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆவர். தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமெனப் பலமுறை கல்வித் துறைக்கும் தமிழக அரசுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளதை” திருமாவளவன் நினைவூட்டினார்.
2017-ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய மூன்று மாதங்களில் கமிட்டி அமைக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இந்நாள் வரையிலும் கமிட்டியும் அமைக்கப்படவில்லை அவர்களது கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
வாரத்தில் மூன்று அரை நாட்கள் மட்டுமே இவர்களுக்குப் பணி வழங்கப்படுவதாகவும், இளங்கலை, முதுகலை பட்டதாரி பகுதிநேர ஆசிரியர்களான இவர்களுக்குத் தனியார் துறை நிறுவனங்களில் ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கப்படுகிற உரிமைகள் கூட வழங்கப்பட வில்லை என்றும் தெரிவித்த அவர், இந்தப் பிரச்சனையில், தமிழக முதலமைச்சர் பகுதிநேர ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்றும் அவர்களை உடனடியாகச் சிறப்பு ஆசிரியர்களாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாகச் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.