Aran Sei

சாதிவாரி மக்கள்தொகைப் புள்ளிவிவரங்களை உடனே வெளியிடுக – ஒன்றிய அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்

சாதிவாரி கணக்கெடுப்புப் புள்ளிவிவரங்களை இனியும் காலந்தாழ்த்தாமல்  வெளியிட வேண்டுமென ஒன்றிய அரசுக்கு விடுதலை சிறுத்தைக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும், நேற்றைய தினம் நடைபெற்ற அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானங்களையும் நிறைவேற்றியுள்ளது.,
இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த  03.08.2021 ஆம் நாளன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற அமர்வு, ‘ஒருவர் 14 ஆண்டுகள் சிறைவாசம் முடித்திருந்தால் அவரை விடுவிப்பதற்கு மாநில அரசுக்கே முழுமையான அதிகாரம் இருக்கிறது’ எனக் கூறியுள்ளது என்றும் , அந்தத் தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாட்டுச் சிறைகளில் உள்ள 14 ஆண்டுகள் சிறைவாசம் முடித்த சிறைவாசிகள் அனைவரையும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி விடுவிக்க வேண்டுமென்று கோரியுள்ளார்.
மேலும், “கடந்த  அக்டோபர்- 08ஆம் தேதி பஞ்சமி நிலமீட்பு வழிகளைக் கண்டறிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட உயர்நிலைக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்து அரசாணைப் பிறப்பித்தது. அந்தக் குழு 1.86 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களைக் கண்டறிந்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. பஞ்சமி நிலம் அனைத்தையும் கண்டறிவதற்கிடையில் இதுவரைக் கண்டறியப்பட்டுள்ள நிலங்களை ஆதிதிராவிட மக்களுக்குப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசை இந்த செயற்குழு கேட்டுக்கொள்கிறது” என்றும் அவர் தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாது, “தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் சாதிகளின் பட்டியலில் பெரும்பாலானவை மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ( OBC) இடம் பெற்றுள்ளன. ஆனால், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள சில சாதிகளும், சீர்மரபினர் பட்டியலில் உள்ள ஒரு சாதியும், ஒன்றிய அரசின் பட்டியலில் இடம் பெறவில்லை”. என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ஒன்றிய அரசு நடத்திவரும் கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்கும்போது அவர்கள் பொதுப் பட்டியலிலேயே வைத்து கருதப்படுகின்றனர். அதனால் அவர்கள் தமது இடஒதுக்கீட்டு உரிமையை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றும்,  எனவே, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பட்டியலில் உள்ள சாதிகள் அனைத்தும் ஒன்றிய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமெனவும் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும்,  “2011 இல் இந்தியா முழுவதும் சமூக பொருளாதார சாதிவாரிக் கணக்கெடுப்பு ( Socio Economic Caste Census – SECC) எடுக்கப்பட்டது.அந்தக் கணக்கெடுப்பில் மற்ற விவரங்களை வெளியிட்டுவிட்டு சாதிவாரி மக்கள்தொகைப் புள்ளிவிவரங்களை மட்டும் இந்திய ஒன்றிய அரசு வெளியிடாமல் வைத்துள்ளது. இனியும் காலந்தாழ்த்தாமல் அந்தச் சாதிவாரி கணக்கெடுப்புப் புள்ளிவிவரங்களை வெளியிட வேண்டுமென இந்தச் செயற்குழு ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்கிறது” என்றும் திருமாவளவன் ஒன்றிய அரசுக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளார்.
aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்