Aran Sei

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு  தொடுக்கவேண்டும்- தமிழ்நாடு அரசுக்கு  திருமாவளவன் வேண்டுகோள் 

 தேசிய குடிமக்கள் பதிவேடு ( NRC) உருவாக்கப்படும் நடவடிக்கைகளை நிறுத்த ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது என்றபோதிலும் அது 2016 ஆம் ஆண்டிலேயே, பாஜகவின் கடந்த ஆட்சியின் போதே கொண்டு வரப்பட்ட ஒன்றாகும். இது 2016ஆம் ஆண்டு மக்களவையில் அது அறிமுகம் செய்யப்பட்டது”.
என்று கூறியுள்ளார்
மேலும், அறிமுக நிலையிலேயே எதிர்ப்பு எழுந்ததால் அது பாராளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்பட்டது என்றும்,  அதற்கு முன்பாகவே அந்த சட்ட மசோதாவில் இருந்த அம்சங்களை உள்துறை அமைச்சகத்தின் குறிப்பாணைகள் மூலமாக பாஜக அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்துவிட்டது என்றும் திருமாவளவன் தனது அறிக்கையில்
சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமட்டுமல்லாது, “2016ஆம் ஆண்டு பாராளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்ட அந்த மசோதா மீதான அறிக்கையை 2019 ஜனவரி மாதத்தில் அந்தக் குழு அரசிடம் அளித்தது. அதனால் ஆட்சிக்காலம் முடிவதற்கு முன்பாக அவசரஅவசரமாக மீண்டும் மக்களவையில் அந்த சட்ட மசோதாவைத் தாக்கல் செய்தார்கள். மக்களவையில் அவர்களுக்கு எண்ணிக்கை பலம் இருந்ததால் அங்கே அது நிறைவேற்றப்பட்டது”. என்றும் தெரிவித்துள்ளார்
மேலும், “2019 பொதுத் தேர்தல் முடிந்து முன்பைவிட அதிக எண்ணிக்கையில் பாஜகவினர் வெற்றிபெற்றதால் 2019 ஆம் ஆண்டு குளிர்காலக் கூட்டத் தொடரில் மீண்டும் அந்த சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நாளிலேயே நள்ளிரவு 12 மணிக்கு அது மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அதற்குப்பிறகு மாநிலங்களவைக்கு அந்த மசோதா சென்றது. மாநிலங்களவையில் பாஜகவும்குப் பெரும்பான்மை கிடையாது. எனவே மாநிலங்களவையில் அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால்,மாநிலங்களவையில் இடம் பெற்றிருந்த அதிமுகவினுடைய 11 உறுப்பினர்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரு உறுப்பினர்- ஆகிய 12 உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்ததால் மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேறியது”. என்றும் திருமாவளவன் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்துசெய்யவேண்டுமெனத் தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுக்கவேண்டும் என்றும் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் தேசிய குடிமக்கள் பதிவேடு ( NRC) உருவாக்கப்படும் என்றும், ஒவ்வொரு குடிமகனும் தான் இந்த நாட்டின் குடிமகன் தான் என்பதைத் தனது முன்னோர்களின் ஆவணங்கள்மூலம் நிரூபிக்கவேண்டும் என ஒன்றிய அரசு கூறுகிறது.  எனவே, என்.ஆர்.சி நடவடிக்கையையும் நிறுத்தவேண்டும் என ஒன்றிய அரசைத் தமிழ்நாடு அரசு வலியுறுத்தவேண்டும் எனக் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்