Aran Sei

குடியரசுத் தலைவரின் உரை: ‘மோடி அரசின் தோல்விகளை மறைக்கும் பிரச்சார உரை’ – திருமாவளவன் விமர்சனம்

குடியரசுத் தலைவரின் உரை ஆளுங்கட்சியினுடைய அரசியல் பிரச்சாரமாகவே அமைந்துவிட்டது ஏமாற்றமளிக்கிறது என்று திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ”மோடி அரசின் தோல்விகளை மூடிமறைத்து ஒப்பனை செய்வதாக குடியரசுத் தலைவர் உரை அமைந்திருக்கிறது. நாடு சந்தித்து வரும் சமூக, பொருளாதாரச் சிக்கல்கள் எது பற்றியும் குடியரசுத் தலைவர் குறிப்பிடவோ அவற்றுக்குத் தீர்வு காண்பதைப் பற்றிப் பேசவோ இல்லை. இது ஏமாற்றம் அளிக்கிறது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தொடங்கியது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் – வேளாண் சட்டங்களுக்கு எதிராக அமளியில் ஈடுபட்ட எதிர்கட்சியினர்

கொரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து முழு அடைப்பு அறிவிக்கப்பட்டதால் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் விவரிக்கமுடியாத வேதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள் என்று நினைவூட்டியுள்ள திருமாவளவன், “புலம்பெயர்த் தொழிலாளர் பிரச்சினை என்பது இன்னும் தீர்க்கப்படாததாகவே இருக்கிறது. அதைப் பற்றிக் குடியரசுத் தலைவர் எந்த ஒரு கருத்தையும் கூறவில்லை.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

“கொரோனாவால் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சம் பேருக்கும் அதிகமாக உயிரிழந்துள்ளனர். உலகில் கொரோனாவால் உயிர் இழந்தவர்களுடைய எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இதைப் பற்றிக் குடியரசுத் தலைவர் உரையில் எந்த ஒரு வருத்தமும் தெரிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.” என்று திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

டிராக்டர் பேரணி Vs ரத யாத்திரை: விவசாயிகளை விமர்சிக்க பாஜகவுக்கு உரிமை உள்ளதா?

மாநிலங்களின் அதிகாரப் பட்டியலில் இருக்கும் வேளாண்துறையில் அத்துமீறி, எவ்வித கலந்தாலோசனைகளையும் செய்யாமல், தன்னிச்சையாக நாடாளுமன்ற நடைமுறைகளை எல்லாம் காலில் போட்டு மிதித்து 3 வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்றும் அந்த உண்மையை மூடிமறைத்து இந்தச் சட்டங்களால் விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும் என்பதைப்போல குடியரசுத் தலைவர் கூறியிருக்கிறார் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைப்படி குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தியிருப்பதாக ஆளும் கட்சி கூறிவரும் கூற்றை வழிமொழிந்துள்ள குடியரசுத் தலைவர், அதற்காக ஒரு சட்டம் கொண்டுவரவேண்டும் என்ற விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை ஏன் மத்திய அரசு ஏற்க மறுக்கிறது என்பதை விளக்கவில்லை என்று திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் – ‘பிரதமர் கலப்படம் இல்லாத பொய்யைச் சொல்கிறார்’

மேலும், “சீனா நமது நாட்டின் சில பகுதிகளில் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்திருக்கிறது, அருணாச்சலப் பிரதேசத்தில் வீடுகளைக் கட்டியிருக்கிறது என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இப்படி நமது நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்டிருக்கும் சவாலைப் பற்றியோ அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பதைப் பற்றியோ குடியரசுத் தலைவர் உரையில் எந்தவொரு குறிப்பும் இல்லை.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“கடந்த ஆண்டு இவ்வாறு உரை நிகழ்த்தும்போது கிராமப்புறப் பகுதிகளின் மேம்பாட்டுக்காக 25 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படும் என்று குடியரசுத் தலைவர் அறிவித்தார். ஆனால், கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயத் துறையை ஒழித்துக் கட்ட சட்டம் கொண்டு வந்ததுதான் தற்போதைய ஆட்சியின் சாதனையாக உள்ளது. அதுபோலவே இப்போதைய உரையும் அரசாங்கத்தினுடைய நடைமுறைக்கு மாறாக இருப்பது மட்டுமின்றி அரசாங்கத்தின் தோல்விகளை மூடிமறைக்கும் ஒப்பனையாக அமைந்துள்ளது.” என்று திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

குறைந்தபட்ச ஆதார விலை – மாநிலங்கள் கேட்டது ஒன்று, மத்திய அரசு கொடுத்தது ஒன்று

மொத்தத்தில் குடியரசுத் தலைவர் உரையில் நம்பிக்கை தரும் செய்திகள் இடம்பெறுவதற்குப் பதிலாக ஆளுங்கட்சியினுடைய அரசியல் பிரச்சாரமாகவே அவரது உரை அமைந்துவிட்டது ஏமாற்றமளிக்கிறது என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்