Aran Sei

சமூகநீதி காக்க பங்காற்றிய அறிஞர் வே.ஆனைமுத்து மறைந்தார் – திருமாவளவன் இரங்கல்

னாதன சக்திகள் தமிழ்நாட்டை மீண்டும் சூறையாட முனைந்துள்ள சூழலில் ஆனைமுத்து அவர்களின் பணி அதிகம் தேவைப்படுகிற நேரத்தில் இயற்கை அவரைக் கவர்ந்துகொண்டுவிட்டது என்றும் அவருடைய இறப்பு தமிழ்ச் சமூகத்துக்குப் பேரிழப்பாகும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, இன்று (ஏப்ரல் 7) அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “சமூக நீதி என்னும் சுடரின் ஒளியை இந்தியா முழுவதும் பரவச் செய்தவர்; பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைப்பதற்கான அடித்தளத்தை அமைத்தவர்; தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டின் அளவு 50% ஆக உயர்த்தப்பட்டதில் பெரும் பங்கு வகித்தவர் ஆனைமுத்து.” என்றுகூறியுள்ளார்.

சமூக நீதிக் கொள்கை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள சூழலில், அவரது மறைவு தமிழர்களுக்கு மிகப்பெரும் இழப்பு என்று குறிப்பிட்ட திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வணக்கத்தைச் செலுத்தியுள்ளார்.

பெரியார் : இந்துத்துவத்திற்கு எதிரான பாதுகாப்பு அரண் – ர.முகமது இல்யாஸ்

“மாணவப் பருவத்திலேயே பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர். கல்லூரிப் படிப்பு முடிந்ததும் அவரோடு இணைந்து அரசியல் பணிகளை முன்னெடுத்தவர். சட்ட எரிப்புப் போராட்டத்துக்கான அறைகூவலை ஏற்று அதில் கலந்து கொண்டு 18 மாதங்கள் சிறைப்படுத்தப்பட்டவர். பெரியாரின் தொண்டராக மட்டுமின்றித் தோழராக இருந்து அவரது சிந்தனைகள் தமிழர்களுக்கு எட்டும் வண்ணம் பெரியாரின் பேச்சுகளையும் எழுத்துகளையும் மூன்று தொகுதிகளாகத் தொகுத்து வெளியிட்டவர்.” என்று ஆனைமுத்துவின் செயற்பாடுகளையும் பணிகளையும் அவர் நினைவுக்கூர்ந்துள்ளார்.

“இந்திய அளவில் பயணம் மேற்கொண்டு சமூக நீதி என்பது இட ஒதுக்கீடு என்னும் உரிமைப் பகிர்வு மட்டுமல்ல; அது சனாதன எதிர்ப்பு என்னும் கொள்கையோடு தொடர்பு கொண்டது என்பதை எடுத்துக்கூறி சனாதானத்தின் உறைவிடமாக இருக்கும் உத்தரப்பிரதேசத்தில் பெரியாரின் கருத்துகள் பரவ வகை செய்தவர். மண்டல் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட அவர் மேற்கொண்ட பயணங்களும் மிக முக்கிய காரணிகளாக அமைந்தன.” என்று திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனுதர்மம் குறித்து பெரியாரும் அம்பேத்கரும் பேசியதைத்தான் திருமா பேசியுள்ளார் – ஸ்டாலின்

மேலும், “தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டின் அளவை 50% ஆக உயர்த்தியதில் அவருடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. பெரியாரின் கருத்துகளைப் பரப்பும் செயற்பாட்டாளராக மட்டுமின்றி அவரது சிந்தனைகளை வளர்த்தெடுத்த கருத்தியல் தளபதியாகவும் அவர் திகழ்ந்தார். சிந்தனையாளர் கழகம், மார்க்சியப் பெரியாரிய பொதுவுடமைக் கட்சி என்ற அமைப்புகளை உருவாக்கினார்.” என்று அவர் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

“பெரியார் பயணம் செய்த நாடுகளுக்கெல்லாம் பயணம் செய்து அவரைப் பற்றிய செய்திகளையெல்லாம் தொகுத்து நூல்களாக வெளியிட்டார். தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் ஏடு ஒன்றை நடத்தினார். அதன்மூலம் பெரியாரின் சிந்தனைகளை சமகாலச் சூழலோடு பொருத்தி அரசியல் சமூக விமர்சனங்களை முன்வைத்தார். பெரியாரின் சிந்தனைகள் மார்க்சியத்தோடும் அம்பேத்கரியத்தோடும் இணைக்கப்பட வேண்டியதன் தேவையை உணர்ந்து அவற்றை இளைஞர்களிடையே பரப்பினார்.” என்று திருமாவளவன் நினைவூட்டியுள்ளார்.

‘பெரியாருக்கு பதில் மோடியை தலைவராக ஏற்றுக்கொண்டதா ஈபிஎஸ் – ஓபிஎஸ் கட்சி’ – ப.சிதம்பரம் கேள்வி

“பெரியார் நெறி பிறழாத அவரது வாழ்க்கை 96 வயதிலும் அவரை ஒரு இளைஞரைப் போல இயங்க வைத்தது. எவருக்கும் அஞ்சாமல் தனது கருத்துக்களைக்கூறும் துணிச்சல் பெற்றவர். சனாதன சக்திகள் தமிழ்நாட்டை மீண்டும் சூறையாட முனைந்துள்ள சூழலில் ஆனைமுத்து-வின் பணி அதிகம் தேவைப்படுகிற நேரத்தில் இயற்கை அவரைக் கவர்ந்துகொண்டுவிட்டது. அவருடைய இறப்பு தமிழ்ச் சமூகத்துக்குப் பேரிழப்பாகும்.” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்  தனது இரங்கல் செய்தியில் பகிர்ந்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்