Aran Sei

பொருளாதரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது – திருமாவளவன்

த்திய தொகுப்பில் முன்னேறிய சமூகத்தினருக்கு (EWS) 10% இடஒதுக்கீடு வழங்குவது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்று  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”மருத்துவப் படிப்புக்கான மத்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க இந்திய ஒன்றிய அரசு ஒப்புக்கொண்டமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தற்போது ஓபிசி பிரிவினருக்கு 27 % இடங்களைக் கொடுப்போம் என ஒப்புக்கொண்டுள்ள இந்திய ஒன்றிய அரசு, கூடவே பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் (EWS) என்று சொல்லப்படும் முன்னேறிய சாதியினருக்கு 10 % இடங்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது” என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த  10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து நாற்பதுக்கும் அதிகமான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளதாகவும்,அந்த வழக்குகள் எல்லாம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் கிடப்பில் உள்ளன என்றும்  அவர் வெளியிட்டுள்ள அந்த  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் , “மராத்தா இட ஒதுக்கீடு தொடர்பாக தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் இந்திரா சகானி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டிய தேவை இல்லையென்றும் அந்தத் தீர்ப்பில் நிர்ணயிக்கப்பட்ட 50% உச்சவரம்பு சரிதான் என்றும் தீர்ப்பளித்துள்ளதாகவும்
அந்தத் தீர்ப்புக்குப் பிறகும் 10 % இட ஒதுக்கீட்டை இந்திய ஒன்றிய அரசு எதன் அடிப்படையில் நடைமுறைப்படுத்த முனைகிறது எனத் தெரியவில்லை”என்றும்  அவர்  தனது   அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், 10 % இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டால் அது உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறியதாகவே இருக்கும். எனவே இந்த 10 % இட ஒதுக்கீட்டை இந்திய ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தக் கூடாது  என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்