Aran Sei

விசிக கொடியை நட எதிர்ப்பு தெரிவித்த ஆதிக்க சாதியினர் – எதிர்பையும் மீறி கொடியை நட்ட பெண்கள்

பெரம்பலூர் மாவட்டம் விராலிப்பட்டி கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் வைப்பதற்கு   எதிர்ப்பு தெரிவித்த  ஆதிக்க சாதியினரையும் , காவல்துறையினரையும்   மீறிப் பெண்கள் பெருந்திரளாக அணிவகுத்து அப்பகுதியில் கம்பத்தை  நிலைநாட்டியுள்ளனர்.

இதுகுறித்து அரண் செய்யிடம் பேசிய  அப்பகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அம்பேத் கோகுல், “விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் வைக்க ஆதிக்க சாதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் தடை விதித்திருந்தது. ஏற்கனவே அப்பகுதியில் திமுக, அஇஅதிமுக கொடிகள் நடப்பட்டு உள்ள நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கொடி நட அனுமதி மறுக்கப்பட்டதால் தடையை மீறி கொடிக்கம்பம் நட முடிவு செய்தோம். இருதரப்பு பேச்சு வார்த்தையின் போது விடுதலைச் சிறுத்தைகள் தமிழ்நாட்டின் அனைத்துப் பிரச்சினைக்கும் அனைத்து மக்களுக்கும் போராடுகிறது. கொடியை நீங்களே ஏற்றுங்கள் என்றும் கூறினோம். இதை ஆதிக்கச் சாதியினர்  மறுத்ததால், விடுதலைச் சிறுத்தை கட்சியில் உள்ள பெண்கள் கொடியை ஏந்தி முழக்கமிட்டு போராட்டத்தை முன்நின்று நடத்தி கொடிக் கம்பத்தை நட்டு கொடி ஏற்றினார்கள்” என்று கூறினார்.

மேலும், இந்த போராட்டம் குறித்து  தனது ட்விட்டர்  பக்கத்தில்  தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “விராலிப்பட்டி கிராமத்தில் வீறுகொண்டெழுந்த வீரமகளிர். ஆதிக்கவெறியை தகர்த்தெறிந்த ஆற்றல்மிகு பெண்சிறுத்தைகள். சாதிய சார்பு காவல்துறையின் சதிகளை முறியடித்த சங்கத்தமிழ்ப் பெண்புலிகள். சீற்றம் தெறிக்க சிலிர்த்து எழுந்து செருபகைக் கும்பலை சிதறச் செய்த சிறுத்தைப் படையின் செம்மலர் சேனைகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்