Aran Sei

‘பாஜகவில் சேருமாறு என்னை அணுகினார்கள்’ – தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் குற்றச்சாட்டு

பாஜகவில் இணையுமாறு தன்னை அந்த கட்சியின் நண்பர்கள் அணுகியதாக தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா குற்றம் சாட்டியுள்ளார்.

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சியில் உள்ளது. இந்த கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு, கட்சியிலிருந்து விலக சமீபத்தில் பாஜக தரப்பில் பேரம் பேசியதாக புகார் எழுந்தது.

குறிப்பாக ஆளுங்கட்சியிலிருந்து விலகி அடுத்த தேர்தலில் பாஜகவில் இணைந்து போட்டியிட்டால் ரூ.100 கோடி தருவதாக கூறி மர்ம நபர்கள் சிலர் அணுகியதாக சில சட்டமன்ற உறுப்பினர்கள் புகார் கூறினர்.

பாஜகவில் இணைய விலை பேசப்பட்ட தெலுங்கானா எம்.எல்.ஏ.க்களுக்கு மிரட்டல் அழைப்புகள் வருவதாக புகார் – காவல்துறையினர் விசாரணை

இந்த விவகாரத்தில் 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரம் தெலுங்கானா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த 7 பேர் கொண்ட சிறப்புக்குழு ஒன்றையும் மாநில அரசு அமைத்து உள்ளது.

இந்த நிலையில் சந்திரசேகர் ராவின் மகளும், சட்ட மேலவை உறுப்பினருமான கவிதாவிடமே பாஜகவில் இணையுமாறு அந்த கட்சியினர் அணுகியதாக நேற்று அவர் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

இதற்கு முன்னதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் கவிதா அலைபேசியில் பேசியதாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மபுரி அரவிந்த் கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த கவிதா, “நான் ஒரு கண்ணியமான அரசியல்வாதி. நீண்ட காலம் அரசியலில் இருக்க விரும்புகிறேன். நான் யார் பெயரையும் கூற விரும்பவில்லை. பாஜகவில் இணையுமாறு அந்த கட்சியின் நண்பர்கள் சிலர் மற்றும் நட்பு அமைப்புகள் என்னை அணுகின. ‘ஷிண்டே மாடல்’ என்ற பெயரில் இந்த வாய்ப்பை வழங்க முன்வந்தனர். ஆனால் பணிவாக மறுத்து விட்டேன். ஏனெனில் எனது தலைவர் சந்திரசேகர் ராவின் கட்சியில்தான் என் இதயம் உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

டி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக பேரம் பேச முயற்சி? – தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் வெளியிட்ட காணொளியால் பரபரப்பு

எனவே தன்னை பற்றி தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்துமாறு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மபுரி அரவிந்த் அறிவுறுத்திய கவிதா, தவறினால் செருப்பால் அடிப்பேன் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

மராட்டியத்தில் சிவசேனா சார்பில் மந்திரியாக இருந்த ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா-காங்கிரஸ் கூட்டணிக்கு வழங்கியிருந்த ஆதரவை திடீரென விலக்கிக்கொண்டு தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாஜகவுடன் கைகோர்த்து தற்போது முதலமைச்சராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே சந்திரசேகர் ராவின் மகள் கவிதா மீது அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மபுரி அரவிந்தின் வீட்டை தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சித்தொண்டர்கள் நேற்று சூறையாடினர். இது ஐதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source : the print

ட்விட்டரை புதைத்த எலான் மஸ்க் | #RipTwitterயை ட்ரெண்டாக்கும் நெட்டிசன்கள் | Aransei Roast | Elonmusk

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்