Aran Sei

மனித உரிமைகள் மீறப்படும்போது ஒலிக்கும் அறத்தின் குரல் – இசைக்கலைஞர் ரிஹன்னா

பிப்ரவரி 3 ஆம் தேதி பிரபல பாப் இசை கலைஞர் ரிஹன்னா, இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகக் கருத்து ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணியின்போது நடைபெற்ற மோதல்களைத் தொடர்ந்து, விவசாயிகள் போராட்டம் பரவாமல் தடுக்கும் விதமாக, டெல்லியின் சில பகுதியில் இணைய சேவை முடக்கப்பட்டது. இது தொடர்பான செய்தியைத் தனது ட்விட்டரில் பகிர்ந்த ரிஹான்னா, விவசாயிகள் போராட்டம்குறித்து நாம் ஏன் பேசவில்லையெனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

ரிஹன்னாவின் இந்த ட்விட்டர் பதிவுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். அதில் இதை அவர் பணம் பெற்றுக்கொண்டு பதிவு செய்தார் என்ற ஒரு குற்றச்சாட்டும் அடங்கும்.

தனது ஒரு ட்விட்டர் மூலம் விவசாயிகள்  போராட்டத்திற்கு சர்வதேச கவனம் பெறச்செய்த ரிஹன்னா, இதற்கு முன்பாகவும் சில விசயங்களில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

  1. #மியான்மர்

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கருத்து பதிவிடுவதற்கு ஒரு நாள் முன்னர் பிப்ரவரி 2 ஆம் தேதி, மியான்மரில் உருவாகி இருக்கும்  ராணுவ புரட்சி  தொடர்பாகத் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். மியான்மர் அதிபரைக் கைது செய்திருக்கும் அந்த நாட்டு ராணுவம், ஒரு ஆண்டு அவசரநிலையை பிப்ரவரி 1 ஆம் தேதி பிரகடனப்படுத்தியது.  இது தொடர்பான மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் ட்விட்டர் பதிவை மறு ட்வீட் செய்த ரிஹன்னா “என் பிரார்த்தனைகள் உங்களுடன் இருக்கும் #மியான்மர்” என ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்தார்.

2. #EndSARS

#EndSARS இந்த ஹேஷ்டேக் நைஜீரியாவில் குடிமக்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்க்கும், திருட்டு எதிர்ப்புச் சிறப்புப் படை (Special Anti Robbery Squad)  -யை கலைக்க கோரி 2017 ஆம் ஆண்டு முதல் சமூக வலைதளங்களில் வைரலானது. தொடர்ந்து சமூக ஊடகங்களில் நடைபெற்று வந்த பிரச்சாரம் 2020 ஆண்டு அக்டோபர் 8 நடைபெற்ற மிருகத்தனமான தாக்குதலில் ஆதாரம் வெளியானதை தொடர்ந்து வீதிகளுக்கு வந்தது. நாட்டிற்கு வெளியே பல நகரங்களில் இருந்த மக்கள் ஒற்றுமையுடன் அணிதிரண்டனர்.

இது தொடர்பாக 2020 ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி ரிஹன்னா, தனது ட்விட்டரில், ரத்த கறைபடிந்த நைஜீரிய கொடியின் ஒரு புகைப்படமும்,  “இது குடிமகனுக்கு இது போன்ற ஒரு துரோகம், பாதுகாக்க வைக்கப்பட்டுள்ள மக்கள் தான் கொலை செய்யப்படுவார்கள் என்று நாங்கள் மிகவும் பயப்படுகிறோம்!” என எழுதியிருந்த ஒரு புகைப்படத்தோடு, #EndSARS என்று பதிவிட்டிருந்தார்.

  1. பிளாக் லைவ்ஸ் மேட்டர்

2020 ஆம் ஆண்டு மே மாதம் மினசோட்டாவில், வெள்ளையின காவலரால் கருப்பினரான ஜார்ஜ் ஃபிலாய்ட் கடுமையான முறையில் கொலை செய்யப்பட்ட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமான பிளாக் லைவ்ஸ் மேட்டர் (Black Lives Matter) என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பாக மே 29, 2020 ல் தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்த ரிஹன்னா, ’போதை பொருள் வைத்திருத்தல்’ அல்லது கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்தல் ஆகியவற்றிற்கு திட்டமிட்ட கொலை தான் சரியான தண்டனை என்றால், திட்டமிட்ட கொலைக்கு என்ன தண்டனையெனக் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் அந்த ட்விட்டர் பதிவில் ஜார்ஜ் ஃபலாய்டின் பெயருடன் சேர்த்து 2020 ஆம் ஆண்டுக் கொலை செய்யப்பட்ட இன்னும் இரு அமெரிக்க கறுப்பினர்களான அகமது அர்பேரி மற்றும் பிரியோன்னா டெய்லர் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார்.

  1. சூடான் கிளர்ச்சி

2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம்  சூடானில் அதிபர் உமர் அல் பஷீருக்கு எதிராகப் போராடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியதை அடுத்து உள்நாட்டு கலவரம் வெடித்தது.

இது தொடர்பாக 2019 ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி ட்விட்டரில் பதிவிட்ட ரிஹன்னா “மக்கள் பேசுவதற்கும், அமைதி, நீதி மற்றும் பொதுமக்கள் ஆட்சிக்கு மாறுவதற்கும் உரிமை உண்டு” எனப் பதிவிட்டுருந்தார்.

இந்தியாவின் விவசாயிகள் போராட்டத்திற்கு மட்டுமல்ல  அதிகார வர்க்கத்தால் மனித உரிமைகள் மீறப்படும்போதெல்லாம் தனது அறத்தின் குரலை ரிஹன்னா பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

கட்டுரையாளர் : நந்தகுமார் ஜகன்நாதன்

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்