Aran Sei

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை முழுமையாக திரும்பப் பெறுவதே ஒரே தீர்வு – இரோம் ஷர்மிளா

சாம், நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் ஒரு சில பகுதிகளில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் திரும்பப் பெறப்படும் என்கிற ஒன்றிய அரசின் முடிவை ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க கோரி 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மனித உரிமைகள் செயற்பாட்டாளர் இரோம் ஷர்மிளா வரவேற்றுள்ளார். மேலும், அச்சட்டத்தை முழுவதுமாக நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலத்தில் அமலில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை சில பகுதிகளில் திரும்பப் பெறுவதாக ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.

நாகாலாந்து, அசாம், மணிப்பூரின் சில மாவட்டங்களில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்கம் – ஒன்றிய அரசு முடிவு

2021 டிசம்பர் 4 ஆம் தேதி நாகாலாந்து மாநிலம், மோன் மாவட்டத்தில் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களில், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற குரல்கள் வேகமாக ஒலிக்க துவங்கின. இதனால் ஓர் உயர்மட்ட குழுவை அமைத்த ஒன்றிய அரசு பின்னர் இம்முடிவை எடுத்துள்ளது.

மணிப்பூரின் இரும்புப் பெண்மணி  என்று போற்றப்படும் இரோம் ஷர்மிளா, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் ஒரு “அடக்குமுறை சட்டம்” என்று தெரிவித்துள்ளார். இச்சட்டத்தை குறித்துப் பேசுகையில், மக்களின்  கிளர்ச்சியைச் சமாளிப்பதற்கு சட்டம் ஒரு தீர்வாக அமையாது என்று கூறியுள்ளார். ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை சில பகுதிகளில் இருந்து திரும்பப் பெறும் முடிவை அவர் வரவேற்றுள்ளார். ”இது சரியான திசையில் ஒரு நேர்மறையான முடிவுதான். ஆனால் இதுவே தீர்வாக அமையாது. இச்சசட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,” என்று அவர் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் தொலைபேசியில் கூறியுள்ளார்.

அதிகாரத்திற்கு எதிராக சமர் புரியும் நாகாலாந்து மக்கள் – பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதிவேண்டி நடைபயணம்

“இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இந்த காலனித்துவ சட்டத்தை நாம் எவ்வளவு காலம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்? அதனால் மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? கிளர்ச்சிக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில், வடகிழக்கு மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய்கள் வீணடிக்கப்படுகின்றன. மாநில முன்னேற்றத்திற்கு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் தடையாக இருக்கிறது” என்று 2016 ஆம் ஆண்டு  தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்த போது தெரிவித்திருந்தார்.

“மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமாக இல்லை; ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை கொண்டு அதிகாரம் மிக்கவர்களும் அரசியல்வாதிகளுமே பலன்  பெறுகிறார்கள். சாமானிய மக்கள் இச்சட்டத்தால் பாதிக்கப்படுகிறார்கள்,” என்று ஷர்மிளா கூறியுள்ளார்.

நாகாலாந்து கொலையும் அமித்ஷா அறிக்கையும் – கோபமடைந்த பாஜக தலைவர்கள்

மக்களைக் கைது செய்யவும், வீடுகளைத் தாக்கவும் அல்லது சுட்டுக் கொல்லவும் இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். “நீங்கள் பலத்தால் மக்களை வெல்ல முடியாது. வடகிழக்கு மக்களின் இதயங்களை வெல்ல அரசாங்கம் முயற்சிக்க வேண்டும். மக்களுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் இடையே உண்மையான தொடர்பு இருந்தால், நன்மை மேம்படும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

2000 ஆம் ஆண்டு இம்பாலுக்கு அருகிலுள்ள மாலோமில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பாதுகாப்புப் படையினரால் பொதுமக்கள் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தை இரோம் ஷர்மிளா தொடங்கினார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்