Aran Sei

பெகசிஸ் உளவு செயலியை இந்தியா வாங்கியது அம்பலம் – தி நியூயார்க் டைம்ஸ் நடத்திய விசாரணையில் வெளியான உண்மை

ஸ்ரேலிடமிருந்த பெகசிஸ் உளவு செயலியை இந்தியா வாங்கியது, தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு, பிரதமர் நரேந்திரமோடி முதல் முறையாக இஸ்ரேலுக்கு சென்றிருந்தபோது, இஸ்ரேலின் அப்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் நரேந்திர மோடிக்கு இடையே கையெழுத்தான 2 பில்லியன் டாலர் பாதுகாப்பு உபகரணம் தொடர்பான ஒப்பந்தத்தில், பெகசிஸ் உளவு செயலியும் இடம்பெற்றிருந்ததாக தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

சுமார் ஓராண்டாக நடத்திய ஆய்வில், பெகசிஸ் செயலியை பயன்படுத்தி, சில நாடுகளை தனக்கு ஆதரவாக இஸ்ரேல் பணியச்செய்திருப்தாகவும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

அந்தவகையில், சர்வதே அரங்கில் இஸ்ரேலுக்கு எதிரான நிலைபாட்டை வைத்திருந்த மெக்சிகோ மற்றும் பனாமா நாடுகள் திடீரென்று இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைபாட் எடுத்தை சுட்டிக்காட்டியுள்ள தி நியூயார்க் டைம்ஸ், பெகசிஸ் செயலியை இஸ்ரேல் அரசு அந்த நாடுகளுக்கு வழங்கியதே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளது.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இஸ்ரேலுக்கு சென்ற முதல் பிரதமர் நரேந்திர மோடி. 2017 ஆம் ஆண்டு பிரதமர் மேற்கொண்ட அந்த பயணத்தின்போது பெசிஸ் உளவு செயலி வாங்கப்பட்டது என்று தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு, ஐநா சமூக பொருளாதார கவுன்சிலில், பாலஸ்தீன மனித உரிமை அமைப்பிற்கு பார்வையாளர் அந்தஸ்தை வழங்குவதற்கு எதிராக இந்தியா வாக்களித்தது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஃபர்பிடன் ஸ்டோரிஸ் என்ற லாப நோக்கமற்ற ஊடகத்திற்கும், ஆம்னஸ்ட்டி இண்டர்நேஷனல் என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பிற்கும் இஸ்ரேலை சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனத்திற்கு சொந்தமான ரகசிய ஆவணங்கள் கிடைத்தன.

சுமார் 50,000 மொபைல் போன் எண்கள் அடங்கிய அந்த ஆவணத்தை, இந்தியாவில் தி வயர் இணையதளம் உட்பட உலகின் தலைசிறந்த 17 பத்திரிகை நிறுவனங்களுக்கு பிரான்ஸ் ஊடகமும், ஆம்னஸ்டி இண்டர் நேஷனலும் வழங்கின.

அந்த ஆவணத்தில் உள்ள, பெகசிஸ் உளவு செயலியை பயன்படுத்தி உளவு பார்க்கப்பட்டதாக கருதப்படும் மொபைல் எண்களை ஆய்வு செய்த அந்த பத்திரிகை நிறுவனங்கள், தங்கள் நாடுகளை சேர்ந்த பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள், முன்னாள் இந்நாள் தலைவர்கள், அரசு அதிகாரிகள், எதிர்கட்சித் தலைவர்கள், அரச குடும்பத்தைசேர்ந்தவர்கள், நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், ராணுவ அதிகாரிகள், தொழிலதிபர்கள் என சமூகத்தின் மிக முக்கியமான நபர்களுக்கு சொந்தமானவை என்பதை கண்டறிந்தன.

இந்தியாவில், சிலருடைய மொபைல் ஃபோன்களை ஆய்வுக்கு உட்படுத்திய தி வயர் இணையதளம், அவற்றில் பெகசிஸ் உளவு செயலி வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை உறுதி செய்தது. இதன் மூலம் பெகசிஸ் அவர்கள் உளவு பார்க்கப்பட்டது உறுதியானது.

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தவுடன், நம்பகமான அரசுகளுக்கு மட்டுமே பெகசிஸ் உளவு செயலியை விற்பதாகவும், அரசுகளை தாண்டி தனியார் நிறுவனங்களுக்கு அவற்றை விற்பதில்லை என்றும் என்.எஸ்.ஓ நிறுவனம் தெரிவித்தது.

பெகசிஸ் செயலியை பயன்படுத்தவில்லை என்று ஒன்றிய அரசு கூறிவரும் நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு இறுதியில் மூன்று பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்துள்ளது.

பெகசிஸ் செயலி குறித்த முழுமையான தகவல்களை தெரிந்துகொள்ள அரண்செய் சிறப்பிதழை (உளவுக்குதிரை) படிக்கவும். இணைப்பு கீழே.

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்