Aran Sei

`தேஜஸ்வியின் தனிப்பெரும்பான்மை ஜனநாயகத்தின் உயிரோட்டம்’ – மு.க.ஸ்டாலின்

`சுதந்திரமான முறையில் நடத்தப்படும் தேர்தலால் மட்டுமே ஜனநாயகத்தின் எதிர்காலம் உறுதிப்படுத்தப்படும்’ என்று பீகார் தேர்தல் குறித்து தி.மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பீகார் மாநில சட்டமன்றத்திற்கு 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை நேற்று (நவம்பர் 10) நடைபெற்றது. முதலில் இழுபறியாக இருந்த தேர்தல் முடிவில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குச் சாதகமாக முடிந்தது. நான்காவது முறையாக ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார்.

இந்நிலையில், பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். பீகார் தேர்தல் தொடர்பான முறைகேடு புகார்கள் அதிர்ச்சியளிப்பதாகவும் தலையீடுகளின்றி நியாயமான, நடுநிலையான, சுதந்திரமான முறையில் நடத்தப்படும் தேர்தலால் மட்டுமே ஜனநாயகத்தின் எதிர்காலம் உறுதிப்படுத்தப்படும் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

கொரோனா காலத்தில் பீகார் சட்டமன்றத் தேர்தலையும், பல மாநிலங்களில் இடைத் தேர்தலையும் தேர்தல் ஆணையம் நடத்தியிருப்பது இந்திய ஜனநாயகத்தின் வலிவையும் பொலிவையும் பிரதிபலிக்கிறது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

`பீகார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக’ கூறியுள்ளார்.

`பீகாரின் இளம் தலைவராக உருவெடுத்து, மக்களின் ஆதரவோடு உயர்ந்துவரும் தேஜஸ்வி யாதவ் தலைமையில், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி இந்தத் தேர்தலில் அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள தனிப்பெரும் கட்சியாகப் பீகார் மாநிலத்தில் வெற்றி பெற்றிருப்பது, அந்த மாநிலத்தின் ஜனநாயகத்திற்கு நல்ல உயிரோட்டத்தையும், துடிப்பான ஊக்கத்தையும் அளித்திடக் கூடியது.”  என்று ஸ்டாலின் கருத்துத் தெரிவித்துள்ளார்

` ‘மகாகத்பந்தன்’ கூட்டணி சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைகேட்டுப் புகார்கள் அதிர்ச்சி அளிக்கிறதென்றும் தேர்தல்கள் எந்தவிதத் தலையீடுமின்றி, நியாயமாக, நடுநிலையுடன், சுதந்திரமாக நடத்தப்பட வேண்டும் என்பதே இன்றைய தினம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அந்த எதிர்பார்ப்பு முழுமையாக நிறைவேறினால்தான், நமது நாட்டில் ஜனநாயகத்தின் வளமான எதிர்காலம் உறுதிப்படுத்தப்படும் என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர வேண்டும் எனப் பெரிதும் விரும்புகிறேன்.’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்