உக்ரைனின் கெய்வ் நகரத்தில் உள்ள சர்வதேச ஐரோப்பியப் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஹர்ஜோத் சிங் என்ற இந்திய மாணவர் 4 முறை துப்பாக்கியால் சுடப்பட்டுப் பலத்த காயமடைந்துள்ளார். ஆனால் காயமடைந்துள்ள எங்கள் மகனை உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை என்று ஹர்ஜோத் சிங்கின் பெற்றோர் தெரிவித்தனர்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதைத் தொடர்ந்து கெய்வ் நகரத்தை விட்டு வெளியேறி லிவிவ் நகரத்திற்குச் செல்ல முயன்றுள்ளார். அப்போது அங்குள்ள ஒரு சோதனைச் சாவடியில் ஹர்ஜோத் சுடப்பட்டுள்ளார். ஆனால் சுட்டது உக்ரேனியர்களா? ரஷ்யர்களா? என தெரியவில்லை என்று ஹர்ஜோத் சிங்கின் தாயார் பிரகாஷ் கவுர் கூறியுள்ளார்.
30 வயதுடைய ஹர்ஜோத் சிங் எலும்பு முறிவு மற்றும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். “4 நாட்களாக, அவர் சுயநினைவின்றி இருந்தார். நாங்கள் பதட்டமாக இருந்தோம். நாங்கள் எதுவும் சாப்பிடவும் இல்லை, சரியாகத் தூங்கவும் இல்லை, ”என்று கண்ணீர் மல்க ஹர்ஜோத் சிங்கின் தாயார் பிரகாஷ் கவுர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் ஹர்ஜோத் சிங் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு அருகில் தான் உள்ளது. ஆனால் இதுவரை யாரும் வந்து ஹர்ஜோத் சிங்கை சந்திக்கவில்லை என்று அவரது தந்தை கேசர் சிங் தெரிவித்துள்ளார். “ஊடகங்கள் மட்டுமே ஹர்ஜோத் சிங்கிடம் பேசியுள்ளன, இந்திய அரசு தரப்பிலிருந்து யாரும் வர வில்லை என்று கேசர் சிங் கூறியுள்ளார்.
ஹர்ஜோத் சிங்கின் மருத்துவச் சிகிச்சைக்கான செலவை ஒன்றிய அரசு ஏற்கும் என்றும், அவரது உடல்நிலை எவ்வாறு உள்ளது என்று கண்டறிய முயல்கிறோம். ஆனால் போர் நடப்பதால் எங்களால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியுள்ளார்.
Source : newindianexpress
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.