Aran Sei

மருத்துவமனை நிர்வாகம் என்னை வெளியேற்றுவதிலேயே குறியாக உள்ளது – அப்துல் ரஹீம் குற்றச்சாட்டு

னக்கு இன்னும் ஒழுங்காகக் கண் தெரியவில்லை, ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் என்னை வெளியேற்றுவதிலேயே குறியாக உள்ளது. எனக்கு அடிக்கடி கை மறத்துப் போகிறது, ஒழுங்காக நடக்க முடியவில்லை என்று காவல்துறையினரால் பாதிக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் அரண்செய் இடம் கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த காணொளியில் அவர் கூறியது,

“சென்னை கொடுங்கையூரில் வசித்து வரும் நான் சட்டம் படித்து வருகிறேன். என்னுடைய கல்லூரி செலவுகளுக்காகப் பகுதிநேரமாக மருந்தகத்தில் பகுதிநேர வேலைப்பார்த்து வந்ததாகவும், கொரோனா காலகட்டத்தில் முழுநேரமாக வேலை பார்த்து வருகிறேன். வழக்கமாக வேலை முடிய இரவு 12 மணி ஆகிவிடும். வேலை முடிந்து தினமும் கொடுங்கையூர் வழியாக மிதிவண்டியில் வீட்டுக்குச் சென்று வருகிறேன்.

செல்லும் வழியில் காவல்துறை கேள்வி கேட்டால் மருந்தக அடையாள அட்டையைக் காட்டிவிட்டு வந்திருக்கிறேன். தினமும் முகக்கவசம் அணிந்ததுதான் சென்று வருவேன். பிரச்சினை நடந்த ஜனவரி 13 அன்று இரவு 11.30 க்கு வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்புகையில் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி எனது அடையாள அட்டையைக் காண்பித்தேன்.

அப்துல் ரஹீமை தாக்கிய காவலர்கள் மீது சாதாரண வழக்குகளை பதிவு செய்து காப்பாற்ற முயல்கிறதா காவல்துறை? – வழக்கறிஞர் மில்டன் கேள்வி

அடையாள அட்டையை வாங்கி கொண்ட காவல்துறை அதிகாரியினர், ‘அழுத்தம் அதிகமாக உள்ளது, தினமும் முகக்கவசம் அணியாத 50 பேர்களைப் பிடிக்க வேண்டும் என்று பேசிக் கொண்டனர்’. நான் முகக்கவசம் அணிந்துள்ளேன், ஆதலால் என்னுடைய அடையாள அட்டையைக் கொடுங்கள், எதற்காக என்னைக் காக்க வைக்கிறீர்கள் என்று நான் கேட்டதற்கு உத்திரகுமார் என்ற காவலர் என்னை அடிக்கக் கை ஓங்கினார். அப்போது நான் படித்தவர்கள் மாதிரி நடந்து கொள்ளுங்கள் என்று கேட்டதற்கு கோவமான உத்திரகுமார் உனக்கு 200 ரூபாய் இல்லை 500 ரூபாய் அபராதம் போட வேண்டும் என்று கூறி, என்னைக் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்கையிலேயே நான் எனது கல்லூரி சீனியர்களிடம் இது சம்பந்தமாகத் தகவல் தெரிவித்து விட்டேன். காவல்நிலையத்தில் என் மீது பெட்டிகேஸ் போடுவதற்காக எனது கைரேகையை மிரட்டி வாங்கினர். சரி பெட்டிகேஸ் போட்டுவிட்டீர்கள் தானே என்னுடைய மிதிவண்டியைத் தாருங்கள், இரவு நேரத்தில் எப்படி நான் நடந்து செல்வேன் என்று கேட்டேன். ஆனால் அவர்கள் அதற்கு எந்த பதிலும் அளிக்காததால் நான் நடந்தே வீட்டிற்கிற்கு செல்லலாம் என்று வெளியே வந்தேன்.

அப்போது என்னைப் பார்த்த உத்திரகுமார் ‘உன்ன எவன்டா நாயே வெளிய விட்டது, உள்ள போடா நாயே’ என்று என்னை அடித்துக் கொண்டே தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டே வந்தார். அப்போது தெரியாமல் எனது கை அவரது முகத்தில் பட்டதால் கோவமான உத்திரகுமார் இரும்பு பைப் எடுத்து என்னை அடிக்க வந்தார். அப்போதுதான் எனது போனை எடுத்து அதைப் பதிவு செய்தேன்.

மாணவர் அப்துல் ரஹீமை சித்தரவதை செய்த போலீஸார் – கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றுவதுதான் தண்டனையா?

மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் காவலர்கள் என்னை கொடுமைப் படுத்தினர். காவலர்கள் தாக்கியதில் காயம் ஏற்பட்டது, ரத்தம் வழிவதை என்னை வைத்தே துடைக்க வைத்தனர். தையல் போட மருத்துவமனைக்குச் சென்றபோது கீழே விழுந்து காயம் ஏற்பட்டது என்று கூறச்சொல்லி காவல்துறையினர் என்னைக் கட்டாயப்படுத்தினர். காவல்துறையினர் தாக்கியதில் கண்ணுக்கு அருகில் ஆறு தையல் போடுமளவு காயம் ஏற்பட்டுள்ளது.

“சட்டப் படிப்பு படித்தால் நீ எல்லாம் பெரிய மயிரா” உங்கள எல்லாம் சும்மா விடக் கூடாது என்று ஆய்வாளர் நசீமா என்னை வெறி தனமாகத் தாக்கினார். ”வக்கீல எல்லாம் இப்படித்தான் அம்மனமா ஆக்கி ஸ்டேஷன்ல வச்சி அடிக்கனும்” என்று சொல்லி என்னை நிர்வாணமாக அமர வைத்து, மத ரீதியாக என்னை இழிவாகப் பேசினர்.

என்னை அப்போது ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்காமல் தூரத்தில் உள்ள செங்கல்பட்டு மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்க்கிறார்கள். பிறகு நான் பிணையில் வெளியே வந்தேன்.

அதன்பின் இது சம்பந்தமாகத் துணை காவல் ஆணையரிடம் நேரில் சென்று புகார் அளித்தேன். அதன்பின்பும் கூட உத்திரகுமார், பூமிநாதன் என்ற 2 அதிகாரிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதுவும் சாதாரண பிரிவுகளின் கீழ் மட்டுமே. முக்கிய குற்றவாளியான நசீமா மீது நடவடிக்கை எதுவும் அப்போது எடுக்கப்படவில்லை. பிறகு தான் வழக்கறிஞர்கள் இணைந்து போராட்டம் நடத்தினர்.

என்னைத் தாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது உரியப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும். என் மீது பதியப்பட்ட பொய்யான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்” என்று அப்துல் ரஹீம் கோரிக்கை விடுத்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்