ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பெண் விரோத சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுமாறு தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா கோரியுள்ளார்.
“ஆண் நண்பர்கள் நட்பான முறையில் கேலி, கிண்டல் செய்வதற்கும் பாலியல் துன்புறுத்தல் செய்வதற்கும் இடையே உள்ள ஒரு சிறு மெல்லிய கோட்டை (சில சமயங்களில் வேண்டுமென்றும், சில சமயங்களில் கவனக்குறைவாகவும்) பொதுவாக மீறுகிறார்கள். எனவே பெண்கள் இந்த இரண்டிற்கும் இடையேயான வித்தியாசத்தை உணர்ந்து ஆண் நண்பர்களுடன் பழகும் போது அதற்கு இடையில் ஒரு உறுதியான கோட்டை வரையத் தெரிந்திருக்க வேண்டும்.” என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பாலியல் புகார்களை விசாரிக்கும் உள் புகார் குழுவின் சுற்றறிக்கையில் கூறியுள்ளது.
2022 ஜனவரி 17 ஆம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பாலியல் துன்புறுத்தல் பிரச்சினைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆலோசனை அமர்வுக்கு ஏற்பாடு செய்வதாகவும், அத்தகைய ஆலோசனை அமர்வுகள் மாதாமாதம் நடைபெறும் என்றும் பல்கலைக்கழகம் கூறியுள்ளது. அதனையொட்டி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தான் இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எல்லா அறிவுரைகளும் எப்பொழுதும் பெண்களுக்கு மட்டுமே ஏன் வழங்கப்படுகிறது? துன்புறுத்துபவர்களுக்குக் கற்பிக்க வேண்டிய நேரம் இது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இந்த பெண் விரோத சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட வேண்டும். பாலியல் புகார்களை விசாரிக்கும் உள் புகார் குழு பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்றே இப்பிரச்சினையை அணுக வேண்டும்” என்று டிவிட்டரில் ரேகா சர்மா கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.