Aran Sei

நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூரின் ட்வீட் – வலுக்கும் எதிர்ப்புகள்

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூரின் ட்வீட் சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.

இன்று(நவம்பர் 29), நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இதையொட்டி, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தனது டிவிட்டர் பக்கத்தில், ஆறு நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார். அத்தோடும், “பணி செய்வதற்கான கவர்ச்சிகரமான இடமாக மக்களவை இல்லை என்று யார் சொன்னார்கள்? காலையில் ஆறு எம்.பிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.

அப்புகைப்படத்தில், திமுகவைச் சேர்ந்த தமிழிசை தங்கபாண்டியன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப்ரேனீத் கவுர் மற்றும் ஜோதிமணி, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுப்ரியா சுலே, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மிமி சக்ரபோர்டி மற்றும் நஸ்ரத் ஜஹான் ருஹி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சசி தரூரின் இக்கருத்திற்கு  சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இதற்கு கடுமையாக பதிலளித்துள்ள தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா, “நாடாளுமன்றத்திலும் அரசியல் களத்திலும் அவர்களின் பங்களிப்பை மறுத்து, அவர்களை கவர்ந்திழுக்கும் பொருளாக மாற்றுவதன் வழியாக நீங்கள் அவர்களை அவமதிக்கிறீர்கள். நாடாளுமன்றத்தில் பெண்களை வெறும் பொருளாக பார்ப்பதை நிறுத்துங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கருணா நந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், “தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களை அவர்களின் தோற்றத்திற்காக அவர்களை குறைத்து மதிப்பிட்டு, தன்னை மையப்படுத்திக் கொள்ள சசி தரூர் போன்றவர்கள் முயற்சிப்பது நம்பமுடியாதது. நண்பர்களே, இது 2021 ஆம் ஆண்டு” என்று ட்வீட் செய்துள்ளார்.

கண்டனங்களை அடுத்து அதற்கு விளக்கமளித்துள்ள சசி தரூர், “அப்புகைப்படம் தொடர்பானவை அனைத்து நகைச்சுவையுடனே செய்யப்பட்டது. அவர்கள்தான் என்னை அந்த தொனியில் ட்வீட் செய்யச் சொன்னார்கள். சிலரை புண்படுத்தியதற்கு மன்னிக்கவும். ஆனால், பணியிடத்தில் இங்ஙனம் தோழமையுடன் இணைந்து செயலாற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவ்வளவுதான்” என்று தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்