இலவசமாக தடுப்பு மருந்து வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து சுவரொட்டிகளை ஒட்டுமாறு பல்கலைக்கழகங்களை கேட்டுக்கொண்ட பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) உத்தரவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான தேசிய மாணவர் சங்கம் (என்எஸ்யுஐ) ‘உங்களுக்கு எதற்கு நன்றி?’ என்ற பெயரில் பரப்புரையை தொடங்கியுள்ளனர்.
பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இலவசமாக கொரோனா தடுப்பு மருந்து செலுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து அனைத்து கல்வி நிறுவனங்களும் பதாகை வைக்க வேண்டுமென பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்திருந்தது.
கடந்த ஜூன் 20 அன்று, பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கு இதுகுறித்து வாட்ஸ் ஸாப் செய்தி அனுப்பட்டுள்ளது. அதில், அப்பதாகையின் படங்களை கல்வி நிறுவனத்தின் சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டுமென யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் கேட்டுக்கொண்டிருந்தார்.
டெல்லி பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம், போபாலில் உள்ள எல்என்சிடி பல்கலைக்கழகம், பென்னட் பல்கலைக்கழகம், குர்கானில் உள்ள நார்த்கேப் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்கள் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் “பிரதமர் மோடிக்கு நன்றி” என்ற ஹேஷ்டேக்குடன் பதாகைகளைப் பகிர்ந்துக்கொண்டன.
இந்நிலையில், நேற்று (ஜூன் 22), டெல்லி பல்கலைக்கழகத்தில் தேசிய மாணவர் சங்கம் (என்எஸ்யுஐ) ‘உங்களுக்கு எதற்கு நன்றி?’ என்ற பெயரில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது. மேலும், இவை பிற பல்கலைக்கழகங்களிலும் வைக்கப்படும் என்று அச்சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, என்எஸ்யுஐ-ன் தேசியத் தலைவர் நீரஜ் குண்டன் பேசுகையில், “மாணவர்களுக்கு எந்தவொரு நிவாரணத்தையும் அறிவிக்காததற்காக நாங்கள் பிரதமருக்கு நன்றி சொல்ல வேண்டுமா? மாணவர்களுக்கு என்று பிரதியேகமாக தடுப்பு மருந்து கொள்கையை வகுக்காததற்காக பிரதமருக்கு நன்றி சொல்ல வேண்டுமா? மாணவர்களுக்கான கல்வி கட்டணம் மற்றும் கல்வி கடனில் எந்தவொரு தளர்வையும் வழங்காத பிரதமருக்கு நன்றி சொல்ல வேண்டுமா?” என்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.
“வேலை இல்லாமல் திண்டாடுபவர்களின் குரல்களைப் புறக்கணித்ததற்காக நாங்கள் பிரதமருக்கு நன்றி சொல்ல வேண்டுமா? மாணவர்களின் கல்வி ஆண்டையே அழித்ததற்காக பிரதமருக்கு நன்றி சொல்ல வேண்டுமா? மாணவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். அவர்களின் நலன்களை காக்க பணம் செலவிடப்பட வேண்டும்.” என்று என்எஸ்யுஐ-ன் தேசியத் தலைவர் நீரஜ் குண்டன் வலியுறுத்தியுள்ளார்.
Source; pti
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.