காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) செயற்பாட்டாளர் தொடர்ந்த அவதூறு வழக்கின் மீதான விசாரணை பிப்ரவரி 5ஆம் தேதி முதல் தினசரி நடைபெறும் என்று மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிவில் நீதிமன்ற நீதிபதியும் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டுமான ஜே.வி.பாலிவால் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் அன்மைய உத்தரவை மேற்கோள் காட்டியுள்ள நீதிமன்றம், ராகுல் காந்திக்கு எதிரான இவ்வழக்கும் அதே பிரிவின் கீழ்தான் வரும் என்றும் எனவே முன்னுரிமை அடிப்படையில் இவ்வழக்கை எடுத்து, தினசரி விசாரணை அடிப்படையில் விரைவாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கில், புகார்தாரர் ராஜேஷ் குண்டேவின் சார்பாக வழக்கறிஞர் பிரபோத் ஜெய்வந்த்தும் ராகுல் காந்தியின் சார்பாக வழக்கறிஞர் நாராயண் அய்யரும் வாதாடி வருகின்றனர்.
2014 ஆம் ஆண்டு, தானே மாவட்ட பிவாண்டி டவுன்ஷிப்பில் ராகுல் காந்தி ஆற்றிய உரையில், மகாத்மா காந்தியின் கொலைக்குப் பின்னால் ஆர்எஸ்எஸ் அமைப்பு இருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். இக்கருத்திற்காக ராகுல் காந்திக்கு எதிராக ஆர்எஸ்எஸ் செயற்பாட்டாளர் ராஜேஷ் குண்டே வழக்கு தொடுத்திருந்தார்.
ராகுல் காந்தியின் கருத்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக ராஜேஷ் குண்டே தனது வழக்கில் கூறியிருந்தார்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.