Aran Sei

‘தமிழகத்திற்கான கல்விக்கொள்கையை வகுத்தளிக்க ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும்’ – தமிழக அரசுக்கு தமுஎகச வலியுறுத்தல்

மிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்ற தமிழக அரசின் முடிவிற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) ஆதரவு தெரிவித்துள்ளது.

தமுஎகசவின் மாநில செயற்குழு கூட்டம், நேற்று (மே 16), அதன் மாநிலத்தலைவர் (பொறுப்பு) மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றுள்ளது. இணையவழியில் நடைபெற்ற கூட்டத்தில்  எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்த அறிக்கையை மாநிலத் தலைவர் (பொறுப்பு) மதுக்கூர் ராமலிங்கம் மற்றும் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

முதலாவது தீர்மானமாக,  “தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்தமாட்டோம் என்று அறிவித்திருப்பதை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வரவேற்கிறது. தேசிய கல்விக்கொள்கையை நிராகரிப்பது என்கிற இந்தச் சரியான முடிவின் தொடர்ச்சியாக தமிழ்நாட்டிற்கான கல்விக்கொள்கையை வகுத்தளிப்பதற்கான ஆணையம் ஒன்றை தமிழ்நாடு அரசு தாமதமின்றி அமைத்திட வேண்டும்.” என தமுஎகச வலியுறுத்துகிறது.

புதிய கல்விக்கொள்கையில் ‘இடஒதுக்கீடு’ என்ற சொல்லே இடம் பெறாதது ஏன்? – சீதாராம் யெச்சூரி

”தேசிய கல்விக்கொள்கையை ஏற்க முடியாது என்று தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையில், இக்கொள்கையை செயற்படுத்துவது தொடர்பாக மாநிலக் கல்வித்துறை செயலாளர்களின் கூட்டத்தை நடத்தப்போவதாக ஒன்றிய கல்வியமைச்சர் அழைப்பு விடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. ஒன்றிய அரசின் இந்த அத்துமீறல் கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் என்று தனது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்.” என தமிழ்நாடு அரசை தமுஎகச கேட்டுக்கொண்டுள்ளது.

“கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் கொரானா ஊரடங்கின் காரணமாக இக்கலைஞர்கள் நிகழ்ச்சிகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர். நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் உறுப்பினராயுள்ளவர்கள், பதிவு செய்யாமல் விடுபட்டிருப்பவர்கள், வாரியத்தில் பதியும் வரம்புக்குள் வராத கலைஞர்கள் அனைவருக்கும் மூன்றுமாதங்களுக்கான வாழ்வூதியம் தரப்பட வேண்டும். கொரானாவால் உயிரிழந்த கலைஞர்களின் குடும்பங்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் துயர்துடைப்பு நிதி வழங்கிடவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” என தமுஎகச வலியுறுத்தியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்