ஏழு தமிழர்கள் தமிழர் விரோத இந்திய அரசாலும், 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய சகோதரர்கள் இந்துத்துவ பயங்கரவாதத்தாலும் பழி வாங்கப்பட்டு, 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடுபவர்களை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பாலன் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, இன்று (ஜூன் 3), அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “ஜூன் 3 முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் அன்று, 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை பட்டுள்ள அனைத்து நீண்ட நாள் சிறைவாசிகளுக்கும், வழக்கு மற்றும் குற்றப்பிரிவு பாரபட்சம் பார்க்காமல் பொதுமன்னிப்பு வழங்க வேண்டுகிறேன். கடந்த மே 24-ஆம் தேதி இஸ்லாமிய சகோதரர்கள் உமர் பாரூக் மற்றும் ஜாகிர் உசேன் உடல்நிலை சிறையில் மோசமடைந்தது தொடர்ந்து, மேற்கண்ட கோரிக்கையைத் தமிழ் தேச மக்கள் முன்னணி சார்பாக தங்களுக்கு முன்வைத்தோம். இப்பொழுது பல்வேறு கட்சியினரும் தலைவர்களும் அதே கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள். ஆகவே உடனடியாக பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
“ஏழு தமிழர்கள், 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய சகோதரர்கள், மாவோவிய, தமிழ்தேசிய தோழர்கள் உள்ளிட்ட அரசியல் சிறைவாசிகளும், சிவில் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான சிறைவாசிகளும், அவர்களின் குடும்பங்களும் குழந்தைகளும் பெரும் துயரத்திலிருந்து ஆறுதல் அடைவார்கள். கேரளா கர்நாடக, ஆந்திரா போன்ற பக்கத்து மாநிலங்களில் அதிகபட்சம் சிறைபட்ட எட்டு ஆண்டுகளில் பொது மன்னிப்பு வழங்கும் நடைமுறை வருடாந்திர நிகழ்வாக நடைபெற்று வருகிறது. ஆனால் தமிழகத்தில் இருக்கின்ற ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பொதுமன்னிப்பு நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“சிறை என்பது தண்டிப்பதற்கான கருவியாக மட்டுமல்ல, சீர்திருத்தத்திற்கான கருவியாகும் பார்க்கப்பட வேண்டியது. ஆனால், அவ்வாறு நடைமுறையில் கடைபிடிக்கப்படுவதில்லை. கடந்த 2018 ஆம் ஆண்டு அப்பொழுது இருந்த தமிழக அரசால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் பாரபட்சமாக கொஞ்சம் பேர் மட்டும் விடுவிக்கப்பட்டு 20 ஆண்டுக்கும் மேலாக சிறையில் வாடுகிற பலரும் விடுதலை செய்யப்படாமல் இருக்கிறார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
“சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அடிமை அதிமுக அரசால் நான் கோவை சிறையில் அடைக்கப்பட்டபோது, ஆயுள் தண்டனை சிறைவாசிகள் அடைக்கப்பட்டிருக்கும் வளாகத்தின் ஒரு பகுதியில் தான் நானும் தோழர்களும் வைக்கப்பட்டு இருந்தோம். அப்பொழுது பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் அன்று பத்தாண்டுக்கு மேற்பட்ட சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என எல்லோரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை, ஏமாற்றமடைந்த சிறைவாசிகள் பலரும் எங்களுடன் அவர்களின் வருத்தங்களை பகிர்ந்து கொண்டார்கள்.” என்று பாலன் நினைவுகூர்ந்தார்.
“பெரும்பாலும் 15 அல்லது 20 ஆண்டுகளை சிறையில் கழித்தவர்கள், குடும்பங்களால் இனிமேல் திரும்பமாட்டார்கள் என நம்பிக்கையற்று கைவிடப்பட்டு வருபவர்கள், சிறையில் உள்ள ஏதாவது ஒரு தொழிலை கற்றுக்கொண்டு தங்களுக்கு வரும் சிறிய ஊதியத்தை குடும்பங்களுக்கு அனுப்பிவைத்து குடும்பங்களோடு உறவைத் தொடர்ந்து கொண்டிருப்பவர்கள். பெரும்பாலானோர் தங்கள் குற்றங்கள் குறித்து வருத்தப்பட்டு, மனம் திருந்தி வாழ்க்கையின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையோடு இருப்பவர்கள்தான். பிப்ரவரி 24 ஏமாற்றத்திற்கு பிறகு, புதிய திமுக அரசு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும், ஜூன் 3 அன்று தங்களை விடுவிக்கும் என நம்பிக்கையோடு, எங்களிடமும் சிறை தொலைபேசி வாயிலாக அவர்கள் குடும்பத்தாரிடமும் பேசி திமுக விற்கு வாக்களிக்க வேண்டும் என சுவருக்கு வெளியே தங்கள் உறவினர்கள் வழியாக பெரும் பிரச்சாரத்தைச் செய்து கொண்டிருந்தார்கள். அதன் நேரடி சாட்சியாக நாங்கள் இருந்தோம்.” என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
“முருகேசன் என்கிற சிறைவாசி (அவரின் உண்மையான பெயர் முருகசாமி ஒடுக்கப்பட்ட நாவிதர் சமூகத்தை சேர்ந்தவர், அவரை சாமி என்று அழைக்க கூடாது என்பதற்காக தன் தந்தை வைத்த பெயரை மாற்றி காவல் நிலையத்தில் முருகேசன் என புது பெயர் சூட்டினார்கள் என சாதிய வன்மத்தை வேதனையோடு நையாண்டியாக கூறுவார்) 23 ஆண்டுகள் சிறையில் இருக்கிறார். அவர்மேல் கொலை குற்றம். ஆனால் அவர் செய்யாத கொள்ளை குற்றத்தையும் இணைத்து அவர் தண்டிக்கப்பட்டார். அதனால் அவர் விடுதலை செய்யப்படாமல் இருக்கிறார். அவரை விட குறைவான ஆண்டுகள் கழித்த பலர் 2018 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.” என்று பாலன் சுட்டிக்காட்டியுள்ளார்.
“கொலையும் கொள்ளையும் இணைக்கப்பட்ட வழக்குகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்படுவதில்லை என்ற ஒரு காரணம் அவர் சிறையிலிருக்க ஒரு காரணமாக இருக்கிறது. ஆதிக்க சமூகத்தைச் சார்ந்த ஒருவரை இவர் கொலை செய்ததும், இவர் எந்த பின்புலமும் இல்லாதவர் என்பதும், கொள்ளை வழக்கு இணைத்துப் புனைவதற்கு காரணமாக இருந்திருக்கிறது. காவல்துறையும் அதிகாரவர்க்கமும் துணை போயிருக்கிறது, இப்படி பல சமூகவியல் காரணங்கள் ஒவ்வொருவருக்கும் பின்னால் உள்ளது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“அதே சிறை வளாகத்தில் கூலிக்கு கொலை செய்கின்ற குற்றக் கும்பல் நிறைய இருக்கிறது. ஆனால், அவர்களில் சர்வ சாதாரணமாக ஒருவர் மீது 2 அல்லது 3 கொலை வழக்குகள், பல கொலை முயற்சி வழக்குகள் கூட இருக்கும். ஆனால் அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்தும் தண்டனையின் பிடியிலிருந்து தப்பித்து விசாரணை சிறைவாசிகள் ஆகத்தான் இருப்பார்கள். பலம்பொருந்திய பின்புலங்கள் அவர்களுக்கு இருக்கும்.” என்று தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பாலன் சுட்டிக்காட்டியுள்ளார்.
“ஆக இப்படியான சமூகவியல் அரசியல் காரணங்களை நூற்றாண்டு காலமாக பரிசீலித்து தான், குற்றம், தண்டனை, சிறை, சீர்திருத்தம், பொதுமன்னிப்பு என்ற நடைமுறை சர்வதேச சமூகத்தால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தண்டனைக்கும் சீர்திருத்தத்திற்கும் உள்ள உறவுகளை தமிழக ஆட்சியாளர்களும் சிறைத்துறை கொள்கை நடைமுறைகளை முன்னேற்ற வேண்டிய அதிகாரவர்க்கமும் பெரும் கவனத்தில் எடுத்ததில்லை. அதனால் தான் ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, கருணைக்கு ஏற்ப பொதுமன்னிப்பு நடைமுறைகள் இருந்து வருகின்றன. அதில் சமூக நீதியின் பால் அக்கறையுள்ள புதிய தமிழக அரசும் முதல்வரும் கவனத்தில் எடுத்து மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். சிறைத் துறையில் உள்ள புதிய இளம் அதிகாரிகள், இவ்வித சமூக அறிவோடு இருப்பதை பார்க்க முடிகிறது. அவர்களிடமும் கலந்தாலோசித்து புதிய மாற்றங்களை கொண்டுவர வாய்ப்புள்ளது. அதற்கும் தமிழகஅரசு நிர்வாக ரீதியாக உரிய கவனம் செலுத்த வேண்டும்.” என்று அவர் கோரியுள்ளார்.
“இறுதியாக, 7 தமிழர்கள் தமிழர் விரோத இந்திய அரசாலும், 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய சகோதரர்கள் இந்துத்துவ பயங்கரவாதத்தாலும் பழி வாங்கப்பட்டு, 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடுகிறார்கள். அவர்களையும் ஒரு சாதாரண குற்ற வழக்கில், முதல் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஐந்தாண்டு தண்டனை கொடுக்கப்பட்ட நிலையில், அதே வழக்கில் உளவுத்துறை நீதிபதி கூட்டு சதி காரணமாக, இரட்டை ஆயுள், வழங்கப்பட்டு 14 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட மாலெ இயக்கத் தோழர்களையும் விடுதலை செய்ய, பொதுமன்னிப்பு வழங்க வேண்டுகிறேன்.” என்று தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பாலன் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்விடுத்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.